Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுயமரியாதையையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி… ஸ்டாலின் பெருமிதம்!

Advertiesment
சுயமரியாதையையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி… ஸ்டாலின் பெருமிதம்!
, வியாழன், 4 நவம்பர் 2021 (17:07 IST)
தீபாவளி நாளான இன்று சென்னைக்கு அருகில் உள்ள இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

இது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூக நீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு. அதனைத்தான், 'நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது' என்று முத்தமிழறிஞர் கலைஞர் குறிப்பிட்டார். திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால், காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே!

ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூக நீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது. பூஞ்சேரி கிராமத்து இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, நலவாரிய அடையாளச் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ், வங்கிக் கடன்கள் ஆகியவற்றை வழங்கினேன். இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது. இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன்.

இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது! 'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரக்கு விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: 9 பேர் பலி!