Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டது : முத்துகுமார் மறைவு பற்றி வைரமுத்து வேதனை

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (11:32 IST)
மறைந்த பாடலாசிரியர் நா. முத்துகுமார் பற்றி, கவிஞர் வைரமுத்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:


 

 
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப்போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்ல.... சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெற வேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர். அழகாகவும் எழுதியவர். மழைமட்டுமா அழகு. வெயில் கூடத்தான் அழகு என்று சொன்னவர், வாழ்வு மட்டுமா அழகு.... மரணம் கூடத்தான் அழகு என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
 
தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று, தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன்.
 
உன் சொந்த ஊர் எது தம்பி என்று ஒருமுறை கேட்டேன். காஞ்சி அண்ணா என்று சொன்னார். அண்ணாவே காஞ்சிதான் என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதைபாட வந்தார். சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு என்று அவரை அறிமுகம் செய்தேன்.
 
இன்று மரணம் அவர் மௌனத்தையே கவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும். நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக் கொள்கிறேன்"

என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments