Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

Advertiesment
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

Siva

, செவ்வாய், 18 மார்ச் 2025 (17:37 IST)
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை என  ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
 
அதே போல், நேற்று கோட்டூர்புரத்தில் ரவுடிகளுக்கு இடையிலான தகராறில் இரட்டைக் கொலை நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
 
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை; ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே "உரிய மரியாதையுடன்" அதனை சொல்வார்கள்.
 
ரமலான் மாதத்தில் அதிகாலை தொழுகை முடித்து ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, அதுவும் உங்கள் தந்தையின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர், வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்ல முடியவில்லை. தன் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து அவரே ஒரு காணொளியை வெளியிட்டும் இருந்திருக்கிறார்.
 
இதற்கெல்லாம் என்ன தான் பதில் வைத்திருக்கிறீர்கள் திரு. முக ஸ்டாலின்  அவர்களே? வழக்கம் போல உங்கள் அமைச்சர்களை விட்டு, "அது தனிப்பட்ட பிரச்சனை" என்று கடந்துவிடப் பார்ப்பீர்கள். அவ்வளவு தானே?
 
இந்த பதிலை சொல்ல உங்கள் திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?
 
உங்கள் வழிக்கே வருகிறேன்- தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கொலை செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? உங்கள் ஆட்சியில் சட்டத்தின் மீதான அச்சம் துளி கூட இல்லாமல் போனதால் தானே? இதனை நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?
 
"கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இடையிலான தகராறில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று நீங்கள் நிச்சயம் கேட்கக் கூடும். ஏனெனில், பொறுப்பற்ற பதில்களை அளிப்பது மட்டும் தானே உங்கள் அரசு செய்து வருவது? ஆனால், அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன், "தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிஸத்தைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று மக்கள் கேட்பார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
 
திரு. ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பட்டா பெற சிறப்பு முகாம்.. முக்கிய அறிவிப்பு..!