பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், நீதியரசர்களை உருவாக்கியதோடு, ஏராளமான அமைச்சர்களையும் உருவாக்கிய கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரில் வரையப்படும் ஒவியங்களில் கல்விக்கண் திறந்த காமராஜர் படம் இல்லாததற்கு சமூக நல ஆர்வலர்கள் மற்றும் திருக்குறள் பேரவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அளவில் கரூர் என்றால் மைய மாவட்டம் என்பது மட்டுமில்லாமல், ரயில் மற்றும் பேருந்துகளுக்கு நல்ல வசதியான மாவட்டமாகவும் இருந்து வருகின்றது. கல்வி, ஆன்மீகம், தொழில், விவசாயம் என்று பல்வேறு தரப்பில் சிறந்து விளங்கும் இந்த கரூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்றது கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியாகும்.
138 வருட பாரம்பரியமிக்க இந்த கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும், நுழைவு வாயில் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதே சுற்றுச்சுவர் பகுதியில் டாக்டர் அம்பேத்கர், சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், அப்துல்கலாம், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, திப்பு சுல்தான், மொராஜி தேசாய், திருப்பூர் குமரன் உள்ளிட்ட 19 தேசிய தலைவர்களை வரைந்து வண்ணம் தீட்டி, சிற்பமாய் ஆங்காங்கே அலங்கரிக்கப்பட்டுள்ளட்து.
ஆனால், கல்விக் கண் திறந்த காமராஜர் சிலையும், அவரது புகைப்படம் அதில் இடம்பெறவில்லை. இது, இப்பகுதி சமூக நல ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களோடு, திருக்குறள் பேரவையினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஏராளமான கல்வி வல்லுநர்கள், அறிவியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி, நீதியரசர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் பயின்ற இந்த பள்ளியில், இவர்கள் படித்த படிப்பிற்கு மூலக்காரணமாகவும், தமிழகம் முழுவதும் கல்விக்கண் திறந்த வள்ளலும், முன்னாள் முதல்வருமான கர்மவீரர் காமராஜர் படத்தை வைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சி. ஆனந்தகுமார் - செய்தியாளர்