தனது அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியை கேரளாவுக்கு வழங்கிய ஏழை மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவை வரலாறு காணாத மழை புரட்டிப் போட்டிருக்கிறது. எங்கும் மரண ஓலம். கேரளாவுக்கு பணம், உணவுப்பொருள்கள், உடைகள் என்று இந்தியாவே வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தனது இதய ஆபரேஷனுக்காக சமூக வலைதளங்கள் மூலம் திரட்டிய பணத்தில் 5000-த்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி நெகிழச் செய்திருக்கிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்சயா என்ற சிறுமி.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குமரபாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - ஜோதிமணி தம்பதியின் மகள்தான் அட்சயா. ஏழாவது படிக்கிறார். பிறவியிலேயே இதயத்தில் பிரச்னையோடு இருந்த அட்சயாவுக்கு, ஆபரேஷன் பண்ண வழியில்லாமல் அவரின் பெற்றோர் அல்லாடியிருக்கிறார்கள்.
கடந்த வருடம் இவரது நிலைமை சீரியஸாக, உடனே ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை. கையைப் பிசைந்து நின்ற அட்சயாவின் பெற்றோருக்கு கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி உதவியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டி அட்சயாவுக்கு மூன்றரை லட்சம் வரை செலவு செய்து சென்னையில் ஆபரேஷன் செய்ய வைத்திருக்கிறார். 'மறுபடியும் ஒரு வருடத்துக்குள் இன்னொரு ஆபரேஷன் செய்யணும்' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அந்த ஆபரேஷனுக்கு தேவை இரண்டரை லட்சம். 'இணைந்த கைகள்' அமைப்பின் சாதிக் அலி அட்சயாவின் ஆபரேஷனுக்காக சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் நிதி திரட்டத் தொடங்கி இருக்கிறார்.
இதுவரை 20,000 வரை கிடைத்திருக்கிறது. கேரள வெள்ளப்பாதிப்பையும் அங்கு மக்கள் பரிதவிப்பதையும் பார்த்து இதயம் கசிந்த அட்சயா, தனக்கு ஆபரேஷன் செய்வதற்காகக் கிடைத்த நன்கொடைப் பணமான 20,000 ரூபாயில் 5000-த்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி நெகிழச் செய்திருக்கிறார்.
`எனக்கும் இப்படி பலர் உதவித்தான், நான் இன்னைக்கு உயிரோடு இருக்கேன். மறுபடியும் எனக்கு ஆபரேஷன் பண்ணவும், பலர் பணம் அனுப்புறாங்க. கேரளாவில் வெள்ளத்தையும், அங்கே என்னைபோல எத்தனையோ சிறுமிகள் தவிப்பதையும் டி.வியில் பார்த்தேன். மனசு தாங்கலை. அதனால்தான், எனக்கு ஆபரேஷன் செய்ய வைத்திருந்த பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, அவங்களுக்கு கொடுத்திருக்கேன்" என்று கூறி நம்மையும் கண்கலங்க வைத்தார்.
பேட்டி : சாதிக் அலி – இணைந்த கைகள் என்கின்ற தனியார் தொண்டு நிறுவனம்