Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லுளிமங்கர், எலும்பு வல்லுனர்: கமல்ஹாசனின் நக்கல் அறிக்கையால் பரபரப்பு

Advertiesment
, புதன், 19 ஜூலை 2017 (21:56 IST)
நடிகர் கமல்ஹாசனை தமிழக அரசியல்வாதிகள் சீண்டிவிட்டு கிட்டத்தட்ட அரசியலுக்கு கொண்டுவந்தேவிட்டார்கள். இனி அவருடைய விஸ்வரூபத்தை சந்திக்கும் திறன் அவர்களிடம் இருக்கின்றதா? என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். 



 
 
குறிப்பாக தன்னை அரசியலுக்கு முடிந்தால் வந்து பார் என்று கூறிய அமைச்சர் ஜெயகுமாரை தம்பி என்றும், தன்னை முதுகெலும்பில்லாதவர் என்று கூறிய எச்.ராஜாவை எலும்பு வல்லுனர் என்றும், தன்னை விமர்சனம் செய்த அனைத்து அமைச்சர்களையும் கல்லுளிமங்கர் என்ற ஊழலார் என்றும் நக்கலுடன் கடிந்துள்ளார்.
 
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள முழு அறிக்கை இதுதான்:
 
வணக்கம்.
 
இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல.
 
அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட.
 
ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.
 
ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச். ராஜாவோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்.
 
நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளிவீசுபவர்கள்... ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்,...என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வரவைக்கிறது.
 
ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம்! அமைச்சர் கட்டளை இது. 
 
ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் அதற்குள் மறந்திருந்தால் நினைவுப்படுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி?
 
இந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக்கொண்ட படி ஆதாரங்களை மக்களே இணைய தளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோளே. நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள்.
 
தற்கால அமைச்சர்களை விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்துகொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும். அத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ! பொறுத்துதான் பார்க்கவேண்டும். இத்தனை லட்சம் பேரை கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் இல்லை. 
நிற்க... செய்தி சரியாகப் புரியாதவங்களுக்கு…
 
“ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல.? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க.”
 
எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னை போல் வெகு சிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர். இது என் குரல் 
துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.
 
மக்கள் மந்தைகள் அல்லர்.
மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள்.
விரைவில் அது கேட்கும்.
தெளிவாக
உங்கள்
-கமல் ஹாசன்.
 
அனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி
http://www.tn.gov.in/ministerslist

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்; இது என் தொண்டர்களுக்கு சமர்பணம்: கமல் ஹாசன் அறிக்கை!!