Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துணை வேந்தர்கள் நியமிக்காததற்கு இதுவே காரணம்! - போட்டுடைத்த ராமதாஸ்

Advertiesment
துணை வேந்தர்கள் நியமிக்காததற்கு இதுவே காரணம்! - போட்டுடைத்த ராமதாஸ்
, புதன், 24 ஆகஸ்ட் 2016 (15:56 IST)
பல மாதங்களாகியும் துணை வேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. இதற்கு ஊழலைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசில் உள்ள 54 துறைகள் சார்ந்த அறிவிப்புகளையும் தாம் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற தீரா தாகத்தால் நேற்று ஒரே நாளில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
 
மணமகனே இல்லாத திருமணத்திற்கு ஆடம்பரமாக அலங்காரம் செய்ததைப் போல, உயர்கல்வி நிறுவனங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்காமல் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அவர்.
 
உயர்கல்வித்துறை சார்பில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.359.22 கோடி ஆகும். இவற்றில் ரூ.310 கோடி திட்டங்கள் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டங்களில் முதன்மையானது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  5000 பார்வையாளர்கள் அமரும் வகையில் பெரும் கூட்டரங்கம் கட்டுவதாகும்.
 
இது தேவையில்லாத  வீண் திட்டம் ஆகும். தேசிய மற்றும் உலகளாவிய கருத்தரங்குகளை நடத்துவதற்காக இந்த அரங்கம் கட்டப்படவிருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். சென்னையில் தேசிய அளவிலோ, உலக அளவிலோ நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் இதுவரை 5000 பேர் கலந்து கொண்டதில்லை; இனி வரும் காலங்களிலும் கலந்து கொள்ளப்போவதில்லை.
 
அதுமட்டுமின்றி, சென்னை பல்கலை.யில் ஒரே நேரத்தில் 3500 பார்வையாளர்கள் அமரும் அளவுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய நூற்றாண்டு விழா அரங்கம் உள்ளது. நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 2500 பேர் அமரும் அளவுக்கு அதி நவீன வசதிகளுடன் கூடிய அரங்கம் உள்ளது.
 
அவ்வாறு இருக்கும் போது 5000 பேர் அமரும் அளவுக்கு அரங்கம் கட்டுவது வீண் செலவாகும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 1280 பேர் தாராளமாக அமரும் வகையில் 50,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தை பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருக்கும் அரசு, இன்னும் பிரம்மாண்டமான அரங்கம் கட்டப்போவதாக கூறுவது வேடிக்கை.
 
அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைவுக் கல்லூரிகளை இணைத்து மேகக் கணினியம் (Cloud Computing) கட்டமைப்பை ரூ.160 கோடியில் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேகக் கணினியம் உயர்கல்விக்கு மிகவும் அவசியம் என்ற போதிலும், பொறியியல் படிப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக்கு கல்வியியல் பல்கலைக்கழகம், வேளாண்மைக்கு வேளாண் பல்கலைக்கழகம் என புலம் சார்ந்த பல்கலைக்கழகங்கள் அதிக அளவில்  தொடங்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்துக்கும் ஒரே கணினியம் அமைப்பது பயனளிக்காது.
 
இதில் வேடிக்கை என்னவெனில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.310 கோடி, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.17.60 கோடி உட்பட மொத்தம் ரூ.359.22 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள  திட்டங்களுக்காக அரசு ஒரு பைசா கூட செலவழிக்கப் போவதில்லை என்பது தான்.
 
மாணவர்களிடம் வசூலித்தும், பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து மானியமாக பெற்றும் சேர்த்து வைத்திருக்கும் நிதியில் பல்கலைக்கழகங்கள் செயல்படுத்தும் திட்டங்களை அரசின் திட்டங்களாக அறிவித்திருக்கிறார். மத்திய அரசின் திட்டங்களையும், மற்றவர்களின் திட்டங்களையும் தமது திட்டமாக காட்டுவது அழகல்ல.
 
2011-ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் நடைபெற்ற சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, உலக உயர்கல்வி மையமாக தமிழகத்தை மாற்றுவது தான் தமது நோக்கம் என்று கூறினார். அந்த நோக்கத்தை நிறைவேற்ற இத்தகைய வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவது போதுமானதல்ல.
 
பல்கலைக்கழகங்களை அறிவுசார் வளாகங்களாக மாற்றும் வகையில் திறமையானவர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் 3 முதன்மைப் பல்கலைக்கழகங்களான சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவை கடந்த பல மாதங்களாக  துணை வேந்தர் இல்லாத பல்கலைகளாக தடுமாறி வருகின்றன என்பது தான் சோகமான உண்மை.
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 17 மாதங்களாகவும், சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி 8 மாதங்களாகவும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 3 மாதங்களாகவும் காலியாக கிடக்கின்றன. இதனால் 761 கல்லூரிகள் முடங்கிக் கிடக்கின்றன.
 
காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை  உடனடியாக நிரப்பும்படி பல மாதங்களாக தமிழக அரசை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இப்பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வுசெய்ய ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால் அரசு நினைத்தால் ஓரிரு நாட்களில் துணைவேந்தர்களை நியமித்திருக்க முடியும். ஆனால், பல மாதங்களாகியும் துணை வேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. இதற்கு ஊழலைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
 
உயர்கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு கொண்ட துணை வேந்தர்கள் தான் தேவையே தவிர, பயனற்ற திட்டங்கள் தேவையில்லை. எனவே, மற்றவர்களின் திட்டங்களை தமது திட்டமாக அறிவிப்பதை விடுத்து 3 பல்கலை.களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 பேருடன் விடுதியில் உல்லாசம் : போலீசாரிடம் சிக்கிய கத்தார் இளவரசி