Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

Siva

, ஞாயிறு, 30 ஜூன் 2024 (12:00 IST)
கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்தும் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்களுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 
 
கள்ளச்சாராய விற்பனை, கள்ளாச்சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் விற்பனை, மக்களை மதுவிற்கு அடிமையாக்குவது போன்றவைதான் கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியின் சாதனைகள். இவற்றைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது. அண்மையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனை என்பது ஆளும் கட்சியினரின் ஆசியோடு நடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், ஆளும் கட்சியினர்மீது அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டின.
 
அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை நிருபிக்கும் வகையில், மூத்த அமைச்சராக உள்ள மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றி இருக்கிறார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள், தன்னுடைய உரையில், "உழைப்பவர்கள் தங்கள் அசதிக்காக மது குடிக்கின்றனர் என்றும்; டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில் 'கிக்' இல்லாததால், கள்ளச்சாராயம் குடிக்கின்றனர் என்றும்; கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு காவல் நிலையம் திறக்க முடியாது என்றும்; மனிதர்களாக பார்த்து திருந்தாவிட்டால், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்றும் கூறி இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதாவது, கள்ளச்சாராயத்தை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார். 
 
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று சொன்னாலே, கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், ‘கிக்’ இல்லாததால் கள்ளச்சாராயம் குடிக்கப்படுவதாக மாண்புமிகு அமைச்சரே தெரிவிப்பது, கள்ளச்சாராய வியாபாரம் தமிழ்நாட்டில் அமோகமாக கொடிகட்டி பறக்க வழிவகுக்கும் அரசே இதை ஊக்குவிப்பது போல் மாண்புமிகு அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசுக்கு, மாண்புமிகு அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அன்றைக்கே தலைவர் அவர்கள் சொன்னார்கள், ஆந்திராவில் சாராயம் இருக்கிறது, இந்தப் பக்கம் பெங்களூரில் சாராயம் இருக்கிறது, பாண்டிச்சேரியில் சாராயம் இருக்கிறது, சுற்றி எல்லா இடங்களிலும் சாராயம் இருக்கின்றது, சுற்றி எரிகிற கற்பூர வளையத்திற்குள், எரியப்படாத கற்பூரமாக எத்தனை நாட்களுக்கு தமிழ்நாடு இருக்குமென்று” சொன்னார். இதனை நியாபகம் வைத்துச் சொல்லும் மாண்புமிகு அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களுக்கு, 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மறைந்த திரு. மு. கருணாநிதி அவர்கள் சொன்னதும், தமிழ்நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்கள் சொன்னதும் மறந்துவிட்டது போலும். இல்லை, தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட போலி வாக்குறுதி என்று நினைத்துவிட்டாரோ என்னவோ! ஒருவேளை நல்லதை மறந்து, இல்லை மறைத்து, தீயதை உரைப்பதுதான் திராவிட மாடல் போலும்!
 
மாண்புமிகு அமைச்சரின் பேச்சினை உற்றுநோக்கும்போது, தவறான யோசனை சொல்லக்கூடிய அமைச்சர் அரசனுக்கு அருகில் இருப்பது, எழுபது கோடி பகைவர்கள் சூழ்ந்து கொள்வதற்குச் சமம் என்ற திருவள்ளுவரின் திருக்குறள்தான் மக்களின் நினைவிற்கு வருகிறது.
 
எது எப்படியோ, ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படாதவன் கொஞ்சம், கொஞ்சமாகத் தன் நாட்டை இழப்பான் என்ற வள்ளுவரின் வாய்மொழியை மனதில் நிலைநிறுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!