சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் யுவராஜ் ’வாட்ஸ் ஆப்’ ஆடியோவை வெளியிட்டது எப்படி என்று காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.
இதனால், இரண்டு வழக்கையும் இணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்
தேடப்பட்டு வந்த யுவராஜ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவகத்தில் சரண் அடைந்தார். இதனால், நாமக்கல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிபிசிஐடி காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், யுவராஜ் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கில், அரசியல்வாதிகளுக்கு, சிபிசிஐடி காவலர்கள் கூலிப்படையினர் போல் செயல்படுவதாகவும், உண்மையை மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
யுவராஜ் பேசும் இந்த ஆடியோ வாட்ஸ் ஆப்-இல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் இருக்கும் யுவராஜ் எவ்வாறு பேசி பதிவு செய்து, யாருடைய செல்போன் மூலம் பரவ விட்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக் காவலர்கள் யாரேனும் இதற்கு உதவி புரிந்தனரா என்றும் சந்தேகிக்கின்றனர்.