வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாகவும், இதனால் ஐந்து நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் நவம்பர் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 7 முதல் 11 ஆம் தேதி வரை மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.