யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காதது அவர் ஆளும் தரப்பின் நட்பு வட்டத்தில் உள்ளவர் என்பதாலேயே என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல யூட்யூபரான இர்ஃபான் சமீபத்தில் துபாய் சென்று தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து பார்த்ததுடன் அதை வீடியோவாக தனது சேனலிலும் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் வீடியோ பதிவை நீக்கிய இர்ஃபான், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரிலும் சென்று சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
ஆனால் இர்ஃபான் உதயநிதிக்கு தெரிந்தவர் என்பதாலேயே அவர் மீது நடவடிக்கை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “இர்ஃபான் யூட்யூபர் திமுக அமைச்சர் உதயநிதியின் நண்பர். திமுகவை சேர்ந்தவர்கள், அவர்களது நண்பர்கள் என்ன செய்தாலும் அவர்கள் மேல் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் தற்போது வரை நான் உள்பட 40க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. என் மீதே 5 வழக்குகள் போடப்பட்டுள்ளது. அப்படி வழக்கு போட்டுதான் ஆனந்தப்படுகிறார்கள்.
ஆனால் ராயபுரம் நரேஸ் என்பவர் சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் சென்று ரிக்கிங் செய்தார். சட்டத்திற்கு புறம்பாக வாகனத்தில் மதுபானங்களை வைத்து விற்கிறார். அவர் திமுகவை சேர்ந்தவர் என்பதாலேயே நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்களும் பலமுறை அவர்மீது புகார் அளித்துவிட்டோம்” என்று பேசியுள்ளார்.