Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Anbumani
, திங்கள், 25 ஜூலை 2022 (12:40 IST)
சமிபத்தில் மின்சார கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு மின்சார மீட்டருக்கும் ரூபாய் 350 வாடகை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு 2 மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனி பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ரூ.350 வீதமும் வாடகை வசூலிக்கப்படவுள்ளது. இது மக்கள் மீதான பொருளாதார தாக்குதல் ஆகும்.
 
ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை கணக்கிடவேண்டியது மின்சார வாரியத்தின் பணி. அதற்கான செலவுகளை மின்சார வாரியம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டுமே தவிர மக்கள் மீது சுமத்தக்கூடாது. 
தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும்போது, மின்சார வாரியத்தின் மின் விற்பனை மூலமான ஆண்டு வருவாய் ரூ.65 ஆயிரம் கோடியாக இருக்கக்கூடும். இதில் 15 சதவீதம் கூடுதல் வருவாய் என வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். அதற்காக தமிழக அரசு செய்யும் முதலீடு ரூ.6 ஆயிரம் கோடி மட்டும் தான். அந்த தொகையைக்கூட மக்களிடமிருந்து பறிக்கவேண்டும் என நினைப்பது அறம் அல்ல. 
 
இந்தியாவுக்கு குறைந்தது 30 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் தேவைப்படும் நிலையில், அவற்றை அதிக அளவில் தயாரிக்கும்போது, ஒரு மீட்டரின் விற்பனை விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் என்ற அளவுக்கு குறையும். அவ்வாறு இருக்கும்போது அதற்காக 2 மாதங்களுக்கு ரூ.350 வாடகை வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? 
 
மின்வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ரூ.350-க்கும் குறைவான மின்கட்டணம் (250 யூனிட்டுகள்) செலுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 1.80 கோடி ஆகும். இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் செலுத்தும் ஒட்டுமொத்த மின் கட்டணத்தை விட அதிக தொகையை மின்சார மீட்டருக்கான வாடகையாக மட்டும் வசூலிக்க நினைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? 
 
அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையில், மின்சார மீட்டருக்கு வாடகை செலுத்த அவர்களால் முடியாது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிப்பது, மின்சார கட்டணத்தை 52 சதவீதம் அளவுக்கு உயர்த்துவது போன்ற மக்களை பாதிக்கும் முடிவுகளை தமிழக அரசு கைவிடவேண்டும். 
 
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு – சென்னை முழுவதும் போலீஸார் குவிப்பு!