எலக்ஷன் என்றாலே கலக்ஷன் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், தேமுதிகவுக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையான வாக்குகள் என்று தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், ”எலக்ஷன் என்றாலே கலக்ஷன் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், தேமுதிகவுக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையான வாக்குகள். தோல்வி என்றைக்கும் நிரந்தரம் இல்லை, மாற்றம் ஒன்றுதான் என்றும் மாறாதது.
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேமுதிக வேட்பாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்காமல் அரசு அதிகாரிகள் செயல்பட்டது உண்மையிலையே கண்டனத்துக்குரியது.
அனுமதி வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை கைது செய்து, பின் விடுவித்தது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. அதிக பணம் விநியோகித்ததன் விளைவாக மறுதேர்தல் நடந்த போதும், மீண்டும் அதே பாணியில் தொகுதி முழுக்க பணம் விநியோகம் செய்து முறையில்லா தேர்தல்களை மூன்று தொகுதிகளிலும் அரங்கேற்றியுள்ளனர்.
ஆளும்கட்சியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவதும், எதிர்கட்சியாக இருப்பவர்கள் தோல்வி பெறுவதும், இடைத்தேர்தல்களில் எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.
அதேபோல் இப்பொழுது நடக்கும் அதிமுக ஆட்சியில் அனைத்து இடைத்தேர்தல்களிலும் திமுக தோல்வியுறுவதும், பாண்டிச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரசே வெற்றி பெற்றதுமே அதற்கான சான்று. எனவே ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் மூலம் பெரும் இதுபோன்ற வெற்றிகளை பற்றி நாம் அதிகம் யோசிக்கத்தேவையில்லை.
இந்த மூன்று தேர்தல்களிலும் அயராது பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிகளும், தோல்விகளும் மனித வாழ்வில் எல்லோருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடப்பவை, எனவே இந்த இடைத்தேர்தலின் முடிவுகளை பொருட்படுத்தாது, மக்களுக்கான பணியில் நாம் என்றும் முழுமூச்சுடன் செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.