தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும், வருங்காலத்தில் தோல்வியை தழுவும் என்று எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், தஞ்சாவூரில் ரெங்கசாமியும், அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியும், திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போசும் வெற்றி பெற்றனர்.
திமுக மட்டும் டெபாசிட்டை பெற்றது. பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்டவை டெபாசிட்டை இழந்துள்ளன.
இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும், வருங்காலத்தில் தோல்வியை தழுவும். தேர்தல் தோல்வி குறித்து கவலைப்படாமல் திமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றும்” என்றார்.