முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் போது கேர்டேக்கர் நியமிக்கப்படாதது குறித்து திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கேலி செய்துள்ளார்.
வெளிநாடுகளில் முதலீடுகளைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இன்று முதல் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த 14 நாட்களும் தமிழகத்துக்கு யார் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. துணை முதல்வராக இருக்கும் ஓ பன்னீர் செல்வமா அல்லது முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் வேலுமணியா என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் அந்த பொறுப்பு யாருக்கும் வழங்கப்படாது எனவும் வெளிநாடுகளில் இருந்த படியே எல்லா வேலைகளையும் முதல்வர் பார்ப்பார் என்றும் முக்கியமானக் கோப்புகள் அனைத்தும் பேக்ஸ் மூலம் அவரிடம் கையெழுத்து வாங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இது ஊடகங்களில் விவாதப் பொருளானது. இது தொடர்பாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது ‘முதல்வருடைய பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டிய அவசியமே தற்போது இல்லை. தொழில்நுட்பம் பெருகிவிட்டது. ஊடகங்கள்தான் கேர் டேக்கர், கேர் டேக்கர் என்று கூறிவருகின்றன. தமிழ்நாடு மக்களை கேர் டேக் செய்யும் அளவுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.’ எனக் கூறினார்.
ஜெயக்குமாரின் இந்த கருத்துக்குப் பதிலளித்துள்ள திமுக பொருளாளர் துரை முருகன் ‘முக்கியமான முடிவுகளை எடுக்கதான் கேர்டேக்கர். ஆனால் அதிமுக அரசுதான் எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்கப்போவதில்லையே அப்புறம் எதற்கு கேர்டேக்கர்’ என நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.