Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலி பணியிடங்களை நிரப்ப தி.மு.க. அரசை வலியுறுத்திய ஓபிஎஸ்

காலி பணியிடங்களை நிரப்ப தி.மு.க. அரசை வலியுறுத்திய ஓபிஎஸ்
, புதன், 16 ஆகஸ்ட் 2023 (18:09 IST)
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப தி.மு.க. அரசை  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

''வரும் ஆண்டுகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்சுதந்திர தின விழாவில் அறிவித்து இருப்பது யானை பசிக்கு சோளப்பொறி என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் 50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது அந்தந்த துறைகளுக்குச் சென்று வந்தாலே கண்கூடாகத் தெரிகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்தவே முடியாத அளவுக்கு பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. தேர்வுகள் நடக்கும் சமயத்தில் வெளிமுகமை மூலமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலே ஆட்களை தெரிவு செய்து தேர்வுகளை நடத்தக்கூடிய கட்டாய சூழ்நிலைக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், போட்டித் தேர்வுகளை, துறை ரீதியான தேர்வுகளை நடத்துகின்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலேயே இந்த நிலைமைதான் நிலவுகிறது. அரசு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அரசுத் துறைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கான ஊதியத்தை போடவே பல அரசு துறைகள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், இதர பொதுத் துறை நிறுவனங்களில் ஆள்பற்றாக்குறை என்பது தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலைமை நீடித்தால், அதிகாரிகளை மட்டும் வைத்துக் கொண்டு வெளிமுகமை மூலம் அவ்வப்போது பணிகளை செய்யக்கூடிய அவல நிலை அரசு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஏற்படும்.

இப்படிப்பட்ட அவல நிலை தமிழ்நாட்டில் நிலவிக் கொண்டிருக்கின்றபோது, 55,000 அரசு பணியிடங்கள் வரும் ஆண்டுகளில் நிரப்பப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெருமையாக கூறியிருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே மூன்றரை இலட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக இரண்டு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 27 மாதங்கள் கடந்துள்ள நிலையில் 15,000 அரசு பணியிடங்கள்கூட நிரப்பப்படவில்லை. கடந்த 27 மாதங்களில் ஓய்வு பெற்றோர், விருப்ப ஓய்வில் சென்றோர் ஆகியவற்றை கணக்கிட்டால் தற்போதைய காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 4 இலட்சமாக இருக்கும். இப்படி காலிப் பணியிடங்களை நிரப்பாமல், வருவாய்ப் பற்றாக்குறையை குறைத்துவிட்டோம், நிதிப் பற்றாக்குறையை குறைத்துவிட்டோம் என்று சொல்வது திறமையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு அல்ல. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அரசின் வருவாயினைப் பெருக்குவதும், காலிப் பணியிடங்களை

நிரப்புவதும், அதன்மூலம் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதும்தான் ஒரு திறமையான அரசிற்கு எடுத்துக்காட்டு. உதாரணமாக ஒரு மருத்துவமனை திறக்கப்படுகிறது என்றால், அதற்கேற்ப அங்கே பணியாளர்களை நியமித்தால்தான் அந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட முடியும், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பலன் அடைவார்கள். மாறாக, பணியாளர்கள் பற்றாக்குறையுடன் மருத்துவமனை திறக்கப்பட்டால், மக்களுக்கு உரிய பலன் உரிய நேரத்தில் சென்றடையாது.

வரும் ஆண்டுகளில் 55,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியின் பாதிக் காலம் முடிந்துவிட்டது. மீதமிருக்கின்ற காலத்திற்குள் காலியாக இருக்கின்ற அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.

எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் இரண்டரை ஆண்டுகளில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள நான்கு இலட்சம் பணியிடங்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடலில் குளிக்க சென்ற மாணவர்கள் மூவர் பலி.. எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!