Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம்.! பாஜகவுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!!

Selvaperundagai

Senthil Velan

, புதன், 11 செப்டம்பர் 2024 (15:01 IST)
அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டிற்கு வழங்காமல் பா.ஜ.க வஞ்சித்து வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து  அவர்  வெளியிட்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி வஞ்சிக்கப்பட்டதோ, அதே வகையில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்குவதில் சமநிலைத்தன்மையோடு அணுக வேண்டிய ஒன்றிய அரசு, அப்பட்டமான பாரபட்சத்தை கடைபிடித்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மொத்த நிதியில் 80 சதவிகித நிதி மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கியிருக்கிறது.
 
தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது. கடந்த 2022-23, 2023-24 நிதியாண்டில் இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. மொத்த 118.9 கி.மீ. தூரமுள்ள இத்திட்டத்திற்கான மதிப்பீடு ரூபாய் 63,246 கோடி. இதில் பெரும்பாலான நிதிச்சுமையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
 
ஜூலை 2024 இல் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இந்தியா முழுமைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூபாய் 21 ஆயிரத்து 247 கோடியே 94 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 9 சதவிகிதம் அதிகமாகும்.
 
இந்த ஒதுக்கீட்டின்படி மகாராஷ்டிர மாநிலத்திற்கு மொத்த நிதி ஒதுக்கீட்டில் 36 விழுக்காடும், குஜராத் மாநிலத்திற்கு 15.5 விழுக்காடும் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நான்கு மாநிலங்களுக்கு, ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 80 சதவிகிதம் ஒதுக்கியிருப்பது அப்பட்டமான பாரபட்சமாகும். இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படாதது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒரு ரூபாய் கூட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்கவில்லை என்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாரபட்ச செயலாகும்.
 
சென்னை மாநகரம் மற்றும் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலை தவிர்ப்பதற்கு ஒரே வழிமுறை மெட்ரோ ரயில் திட்டமாகும். இந்த அடிப்படையில் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூபாய் 14,000 கோடி ஒதுக்கப்பட்டு முதல் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அது இன்றைக்கு பயணிகளுக்கு பெருமளவில் உதவி வருகிறது.
 
மேலும், “பல திட்டங்களுக்கு ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும் மாநில அரசு மெட்ரோ ரயில் திட்டங்களை பல வழித்தடங்களில் செயல்படுத்தப்படும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதை வரவேற்கிறேன். ஒன்றிய அரசு புறக்கணித்தாலும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தற்போது மெட்ரோ ரயில் திட்டங்கள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. ஆனால், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிற தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்குகிற நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரியதாகும்.

 
எனவே, தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதங்களுக்கு ஒன்றிய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இத்தகைய பாரபட்ச போக்கை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பின்பற்றுமேயானால் தமிழக மக்களின் கடும் கொந்தளிப்புக்கும், எதிர்ப்புக்கும் ஆளாக நேரிடும் என செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் வழக்கில் இருந்து விலகல்.. வேறு யார் ஆஜராவார்கள்?