வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது ஏன்? என்று மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. இந்த வன்முறைக்கு தேசவிரோதிகள் சிலர் போராட்டத்தில் புகுந்தது தான் காரணம் என்று தமிழக முதல்வர் காரணம் தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு காவல்துறையினர் தான் முழு காரணம் என்று கூறி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தது.
இந்த கலவரம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஊடகங்களுக்கு எப்படி பேட்டி கொடுக்கலாம் என்று சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில்,
காவல் துணை ஆணையராக இருக்கும் நீங்கள், கடந்த 26, 28 ஆகிய தேதிகளில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளீர்கள். நீதிமன்றம், மனித உரிமை ஆணையத்தில் வழக்கு உள்ளபோது நீங்கள் எப்படி பேட்டியளிக்கலாம்? இது, விசாரணை அதிகாரிகளின் நடவடிக்கைகளை பாதிக்காதா? ஐபிஎஸ் அதிகாரியான தங்களுக்கு விசாரணை தொடர்பான விஷயங்கள் தெரியாதா? எனவே, தாங்கள் இனி இதுபோன்ற தவறான தகவல்களை ஊடகங்களுக்கு அளிக்கக்கூடாது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.