கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் பாஜக அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று மாலை நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகை புரிந்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பேரணி நடத்த பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக காவல்துறை அனுமதி கோரப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலாது என கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் பிற தீவிரவாத அமைப்பால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்றும் வாகன பேரணிக்கு அனுமதி தந்தால் மருத்துவ அவசர ஊர்தி மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறமும் கூடும் தனிநபர்களை சோதனை செய்வது கடினம் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
இதனிடையே பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் பாஜக அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று மாலை நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.