Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்குமார் கைதில் சந்தேகம் கிளப்பும் காவல்துறையினரின் நடவடிக்கை

ராம்குமார் கைதில் சந்தேகம் கிளப்பும் காவல்துறையினரின் நடவடிக்கை
, செவ்வாய், 5 ஜூலை 2016 (15:26 IST)
ராம்குமார் கைது செய்யப்பட்டதில், குற்றவியல் நடைமுறைகளை காவல் துறையினர் அப்பட்டமான முறையில் மீறி இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
 

 
சுவாதி கொலை வழக்கில், ராம்குமார்தான் குற்றவாளி என்ற காவல்துறை வந்தது முடிவுக்கு எப்படி? வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் முன்பே, ராம்குமாரின் புகைப்படம், வாக்குமூலங்களை வெளியிட்டது ஏன்? என்று அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ள நீதிபதிகள், இவ்வழக்கில் காவல்துறையினர் ரகசியம் காக்க தவறி விட்டதாக கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
ராம்குமார் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர், 2 நாள் சிகிச்சைக்குப் பின், நேற்று திங்களன்று சென்னைக்குக் கொண்டு வந்தனர். இங்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
அவரிடம், எழும்பூர் 14ஆவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், மருத்துவமனைக்கே வந்து, வாக்குமூலம் பெற்றுள்ளார். மேலும், ராம்குமாரை ஜூலை 18ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
 
அடுக்கடுக்கான கேள்விகள்:
 
இதனிடையே சுவாதி படுகொலை தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியிடம் நீதிபதிகள் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பினர்.
 
சுவாதி கொலைவழக்கு விசாரணையில், காவல்துறை ரகசியம் காக்கத் தவறி விட்டதாக கண்டித்த அவர்கள், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்று காவல்துறை முடிவு செய்தது எப்படி; அதேபோல, இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே, ராம்குமார் சிகிச்சை பெறும் புகைப்படமும், அவர் வாக்குமூலத்தில் கூறிய தகவலும் ஊடகங்களில் வெளியானது எப்படி? என்று கேள்வி எழுப்பினர்.
 
மேலும், சுவாதி கொலை வழக்கில், குற்றவியல் நடைமுறைகளை போலீசார் அப்பட்டமாக மீறி இருப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள், இது எவ்வாறு நடந்தது? என்றும் கேட்டனர். அத்துடன், சுவாதி வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்காது என்றும் அறிவித்தனர்.
 
காவல்துறை நடவடிக்கையில் எழும் சந்தேகங்கள்:
 
பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில், காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு ராம்குமார் என்பவரை கைது செய்துள்ளனர் என்று கூறப்படும் நிலையில், இந்த கைது தொடர்பாக ஊடகங்களில், பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ராம்குமார்தான் குற்றவாளி என்ற முடிவுக்கு காவல்துறை எப்படி வந்தது; கழுத்தை அறுத்துக் கொண்ட அவரின் புகைப்படங்கள் மற்றும் அவர் அளித்த வாக்குமூலங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டதன் நோக்கம் என்ன?
 
இருட்டுக்குள் ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது போல வெளியான புகைப்படம் யார் எடுத்தது; அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை வீடியோவாக்க வேண்டிய தேவை காவல்துறைக்கு இருந்தாலும், அதை ஊடகங்களுக்கு கொடுத்தது ஏன்? என்று கேள்விகள் நீள்கின்றன.
 
பொதுவாக இதுபோன்ற வழக்குகளில், குற்றவாளி என ஒருவரையோ, அல்லது அதற்கும் மேற்பட்டோரையோ கைது செய்தாலும், மேலும் `உடந்தையாக யாரும் இருந்தார்களா என விசாரித்துக் கொண்டுள்ளோம்’ என்றுதான் காவல்துறையினர் கூறுவார்கள்.
 
ஆனால், ராம்குமார் மருத்துவமனையில் இருக்கும்போதே, சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டும்தான் குற்றவாளி; அவருக்கு யாரும் உடந்தையில்லை என்று காவல்துறையினர் அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய தேவை என்ன?
 
கடைசியாக வெளியான சிசிடிவி காட்சியில், கொலையாளி இருசக்கர வாகனத்தில், சுவாதி அவரது தந்தையுடன் செல்லும் பைக்கை, பின் தொடர்வது போன்ற காட்சி உள்ளது. பரம ஏழையான ராம்குமாருக்கு சென்னையில் மூன்றே மாதத்தில், பைக் எப்படி கிடைத்தது? அதைக் கொடுத்தவர் யார்?
 
அதுபற்றி போலீசார் விசாரித்தார்களா? எதன் அடிப்படையில், ராம் குமாருக்கு உடந்தையாக யாரும் இல்லை என்று முடிவுக்கு வந்தார்கள்? கொலை நடந்த பிறகு ராம்குமார், மேன்ஷனுக்கு சென்று, ஆடை களை எடுத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பியதாக கூறப்படும் நிலையில், ரத்தக்கறை படிந்த சட்டையோடுதான் மேன்ஷனுக்குள் ராம்குமார் சென்றாரா?
 
விசாரணை, கைது நடவடிக்கைகளை பகிரங்கமாக நடத்திய காவல்துறை, இந்த கேள்விகளுக்கான பதில்களையும் பகிரங்கமாக அறிவித்தால் மட்டுமே சந்தேகங்கள் விலகும் என்று பலவிதமான கேள்விகள் சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ரம்ஜான் எங்களுக்கு வருத்தமானதாக இருக்கும்: சுவாதி நண்பர் பிலால் உறவினர்கள்