கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திற்கு உள்ளும் வெளியிலும் இருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திற்கு உள்ளும் வெளியிலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்த டீக்கடைகள், செல்போன் கடைகள், செருப்புக்கடைகள், குளிர்பானக்கடைகள் என பல்வேறு கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இருப்பினும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்ததை தொடர்ந்து இன்று மத்திய மண்டல மாநகராட்சி உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். எனவே கடையின் உரிமையாளர்கள் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.