Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நேரத்தில் 9 பள்ளிகள், 2 கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருச்சியில் பரபரப்பு..!

bomb threat

Mahendran

, வெள்ளி, 4 அக்டோபர் 2024 (11:34 IST)
திருச்சியில் ஒரே நேரத்தில் 9 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி பாரதிதாசன் சாலை, மேலப்புதூர், மன்னார்புரம், சிங்காரத்தோப்பு, கருமண்டபம், கே.கே. நகர் போன்ற பகுதிகளில் உள்ள 9 பள்ளிகளுக்கும், சிங்காரத்தோப்பில் உள்ள 2 கல்லூரிகளுக்கும் நேற்று  இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மெயிலில், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மதனகோபால் என்ற பெயரில் இருக்கும் ஒரு ஐ.டி. முகவரியில் இருந்து இந்த மெயில் வந்தது.
 
இந்த மிரட்டல் தகவல் அறிந்த பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று முழுமையான சோதனை நடத்தினர். இதன்பின், அந்த மிரட்டல் வெறும் பொய்யான தகவல் என்பது தெரிந்தது. குறிப்பாக, காட்டூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் இன்று திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பள்ளி மற்றும் ஆச்சாரியா, காட்டூர் சிபிஎஸ்இ பள்ளியை தவிர்த்து, மிரட்டல் விடுக்கப்பட்ட மற்ற 6 பள்ளிகளுக்கும், 2 கல்லூரிகளுக்கும் இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் போலீசார் மீண்டும் அதே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
 
இரண்டாவது நாளாக தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது, நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது இதுவரை தெரியவில்லை, ஆனால் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த மிரட்டல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினர் அந்த மர்ம நபரை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே பெண்ணுக்கு 20 முறை திருமணம்.. சுற்றுலா பயணிகளின் பலிகடா ஆகும் இளம்பெண்கள்..!