பி.எட். படிப்பிற்கான வினாத்தாள் கசிந்ததை அடுத்து புதிய வினாத்தாள் அனுப்ப உயர் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி எட் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்காவது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற இருந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக கூறப்படுவது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சென்ற நிலையில் உடனடியாக வினாத்தாளை ரத்து செய்த உயர் கல்வித்துறை இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு முன் இணையதளம் மூலம் புதிய வினாத்தாள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழக அளவில் நடத்தும் வினாத்தாளை கசிய விட்டவர்கள் யார்? இந்த கசிவு செயலுக்கு யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்திய அளவில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த நிலையில் தற்போது மாநில அளவில் நடக்கும் வினாத்தாளும் கசிந்துள்ளது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.