இன்னும் எத்தனை உயிர்ப் பலிகள் வேண்டும்? என தூத்துகுடி விஏஓ படுகொலை குறித்து அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் சகோதரர் லூர்து பிரான்ஸிஸ் அவர்கள், அவரது அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீரழிந்து இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
கடந்த 13 ஆம் தேதி, தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக, ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட சில நபர்கள் மீது, முறப்பநாடு காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார்.
அந்த நபர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தன் பணியைச் சரியாகச் செய்த அரசு அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்தப் பாதுகாப்புமில்லாத சூழலே நிலவுகிறது. சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், குற்றச் சம்பவங்களைப் பூசி மெழுகப் பார்க்கும் கையாலாகாத திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இன்னும் எத்தனை உயிர்ப் பலிகள் வேண்டும் இந்த திறனற்ற திமுக அரசு தூக்கத்திலிருந்து கண் விழிக்க?
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.