Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தமா? அவதூறு பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி

Siva
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (13:19 IST)
அதானி நிறுவனத்துடன் மின்சார ஒப்பந்தம் செய்திருப்பதாக அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை ரூ.7.01க்கு நீண்ட கால அடிப்படையில் பெற 2014ல் ஒப்பந்தமிட்ட  அரசை விட்டுவிட்டு, 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற உடனே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில்  அதானி நிறுவனத்துக்கு எதிரான வழக்கை திறம்பட நடத்தியை திராவிட முன்னேற்றக் கழக அரசை- மின்சார வாரியத்திற்கு சாதகமாக, அதாவது ரூ.5.10க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்னும் அளவிற்கு சாதகமான ஆணையைப் பெற்ற அரசை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமாகாது.  
 
அதனால்தான் அறிக்கைகள் விட ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதற்கு அடிப்படை புரிதலும்  அறிவும் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டு காலமும் மின்சார கொள்முதல் குறித்து எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். 
 
அதாவது 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நேரடியாகவே தனியார் நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ரூபாய் 7.01 என்ற அளவில் நீண்ட காலம் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டதை விட, கழக ஆட்சியில் மிகக் குறைந்த அளவில், யூனிட் ரூபாய் 2.61 மட்டும் என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுவும் தனியார் நிறுவனத்துடன் அல்ல; ஒன்றிய அரசின் நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 
மின் உற்பத்தியினைப் பொருத்தவரையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அனைத்து மின் நிலையங்களிலிருந்தும் முழுமையான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையினைப் பொறுத்து, நடுத்தர மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் அடிப்படையில் யூனிட் ஒன்றிற்கு ரூ.3.45 முதல் 5.31 வரை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒளிவு மறைவற்ற ஒப்பதப்புள்ளி வாயிலாக மாண்பமை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. 
 
1x800 மெகாவாட் திறனுள்ள வடசென்னை அனல்மின் திட்டம், நிலை-3, கடந்த 27.06.2024 அன்று, தனது முழு நிறுவுத்திறனான 800 மெகாவாட் மின் உற்பத்தியை வெற்றிகரமாக எட்டியுள்ளது. இதுவரை சுமார் 750 மில்லியன் யூனிட் மின்சாரம் வடசென்னை அனல் மின் திட்டம், நிலை-3-இல் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு பயன்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படைத் தகவல்களைக்கூட அறியாதவர்கள் போல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது!
 
மின்கட்டண உயர்வு மூலம் 31,500 கோடி ரூபாய் என்று ஒரு அபத்தமான குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள். எப்போது மின் கட்டண உயர்வை ஏற்படுத்தினாலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது திராவிட முன்னேற்றக் கழக அரசு மட்டுமே. இலட்சக்கணக்கான ஏழை எளிய  மக்களின் வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு மின் மானியமாக வழங்க ஆணை வெளியிட்டு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வே இல்லாமல் பார்த்துக்கொண்டவர் முதலமைச்சர் மட்டுமே என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 
 
ஏழை எளிய மின் நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும், தமிழ்நாடு அரசு 17,117 கோடி ரூபாயினை மானியமாகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கி, தமிழ்நாட்டு மக்களை தாய் உள்ளத்துடன் நடத்திச் செல்பவரும் எங்கள் முதலமைச்சர் அவர்கள் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதைவிட முக்கியமாக மின்கட்டண வருவாய் அதிகரிப்பு ஒருபுறம் என்றாலும், விலைக்குறைவான மின்கொள்முதல், செலவுகளைப் பெருமளவில் கட்டுப்படுத்தியது, உள்நாட்டு மின் உற்பத்தி என நிர்வாகத் திறன்மிக்க நடவடிக்கைகள் கழக அரசில்தான் எடுக்கப்பட்டுள்ளன. 
 
அந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் என்பதை, அறியாமையில் உளறிக் கொட்டும் சில அறிக்கை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்!
 
ஆகவே உண்மை இவ்வாறு இருக்க, 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கட்டாயத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசு நிறுவனமான சூரிய மின்சக்தி கழகத்திடமிருந்து இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைப் போலவே சூரிய ஒளி மின்சாரத்தைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு மின்சார  வாரியமும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அது சம்பந்தமாக 2024-ஆம் ஆண்டு நிறுவனத்தின் பிரதிநிதியை  முதலமைச்சர் சந்தித்ததாகக் கூறுவது  முற்றிலும் தவறானது மட்டுமல்லாது, மக்களிடம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைக் கொண்டுச் சென்று தமிழ்நாட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகவே கருத வேண்டி உள்ளது. 
 
அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதையும் மறைத்து- உச்சநீதிமன்ற உத்தரவையும் அறியாதவர்கள் போல்- அதிமுக அரசின் மின்கொள்முதலை திமுக அரசின் மின் கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ- அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்குள்தான் அதிமுக- பா.ஜ.க. கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது.
 
முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசில், மின்வாரியம் நிர்வாக ரீதியாகவும், நிதிச் சுமையிலிருந்தும் சீரடைந்து, ஏழை எளிய நுகர்வோரின் நலனைப் பிரதானமாக எண்ணி நல்லாட்சிக்கு இலக்கணமாகச் செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள இயலாமல், அவரைச் சந்தித்தார் இந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார் என்றெல்லாம் பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments