காந்தி குறித்த சிறப்பு வீடியோ வெளியீட்டு விழாவுக்கு பாலிவுட் பிரபலங்களை அழைத்த பிரதமர், தென்னிந்திய நடிகர்களை அழைக்காதது ஏன் என நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.
காந்தியின் 150வது பிறந்தநாளுக்காக சிறப்பு வீடியோ ஒன்றை பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டார். பிரதமர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்வில் பிரபலமான பாலிவுட் நடிகர்களான ஷாரூக்கான், அமீர்கான், இயக்குனர் இம்தியாஸ் அலி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் ராஜ்குமார் இரானி இயக்கி வெளியிட்ட அந்த வீடியோ தொகுப்பில் அமீர் கான், சல்மான்கான், ரன்பீர் கபூர், அலியாபட் உள்ளிட்டோர் பங்குபெற்றுள்ளனர்.
பாலிவுட் பிரபலங்களால் தயாரிக்கப்பட்டு அவர்களை மட்டுமே அழைத்து நடத்தப்பட்ட வீடியோ வெளியீட்டு விழா குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை குஷ்பூ. அதில் அவர் “எவ்வளவோ நல்ல சினிமாக்களையும், சினிமா கலைஞர்களையும், நடிகர்களையும் கொடுத்து உலக அளவில் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர்கள் தென்னிந்திய சினிமா துறையினர். அப்படியிருக்க தென்னிந்திய சினிமா பிரபலங்கள் ஒருவரைக்கூட அழைக்காமல் பாலிவுட் பிரபலங்களை மட்டும் அழைத்துள்ளீர்களே! ஏன் இந்த பாகுபாடு?” என பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவியும், தொழிலதிபருமான உபசனா கொனிடேலாவும் பிரதமர் நரேதிர மோடி தென்னொந்திய சினிமா பிரபலங்களை அழைக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.