அறுபடை தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ராஜகோபுரம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் ரூ. 2.50 கோடியில் நடைபெற்றது. கடந்த 26ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
மேலும் சண்முகருக்கு ராஜகோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள 49 குண்டங்கள் கொண்ட யாக சாலையிலும், பரிவார மூர்த்திகளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையிலும் பூஜைகள் நடைபெற்றன.
இன்று காலை 12ஆம் கால யாகபூஜை நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கும்பங்கள் கிரிபிரகாரம் சுற்றி கோயில் ராஜகோபுரம், விமானங்கள், சன்னதிகளுக்கும் மேள வாத்தியம் முழங்க எடுத்து செல்லப்பட்டன.
சரியாக 10.30 மணியளவில் ராஜகோபுரம் உள்பட அனைத்து விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் ''முருகனுக்கு அரோகரா'' என்ற பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர். சன்னதிகளில் உள்ள சுவாமிகளுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
மதியம் 12 மணிக்கு சண்முக பெருமானின் உருகு சட்ட சேவையும், சண்முக விலாச மண்டபத்தில் சுவாமி ஆறுமுக நயினாருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு விநாயகர், சண்முகர், குமரவிடங்க பெருமான், ஜெயந்தி நாதர், வள்ளி- தெய்வானை அம்பாள், நடராஜ பெருமான், அலை வாயுகந்த பெருமான், நால்வர், சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகளின் வீதி உலா நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், தலைமை செயலர் ஸ்ரீபதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், அயல்நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.