"அட்சய பாத்திரம்'' என கூறி சாதாரண பாத்திரத்தை விற்க முயன்ற இருவர் கைது
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
பவானிசாகர் அருகே ''அட்சய பாத்திரம்'' என கூறி சாதாரண பாத்திரத்தை விற்க முயன்ற இரண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தான் என்கிற முத்தப்பன் (35). இவர் இப்பகுதியில் சாதாரண பாத்திரத்தை வைத்துக்கொண்டு அது ரைஸ் புல்லிங் பாத்திரம் இது அதிஷ்டமானது என கூறி ஏமாற்றி வருவதாக பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் முத்தானை கைப்பிடியாக பிடிக்க வேண்டும் என காவல்துறையினர் திட்டமிட்டனர்.சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுந்தரராஜன் மேற்பார்வையில் பவானிசாகர் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணி, சத்தியமங்கலம் காவல்துறை ஆய்வாளர் மணிவர்மன், பவானிசாகர் உதவி ஆய்வாளர் ஹபியுல்லா, தலைமை காவலர் நாகேந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் ரகசியமாக விசாரித்து வந்தனர்.இதற்கிடையில் நேற்று மாலை பவானிசாகர் காவல்நிலையத்தில் சென்னை கே.கே.நகர் ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் தெருவை சேர்ந்த பாலா (43) என்பவர் ஒரு புகார் கொடுத்தார்.அந்த புகாரில், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் டிஜிட்டல் விளம்பர போர்டு தயாரிக்கும் பணி செய்து வருகிறேன். தொழில் ரீதியாக ஈரோட்டை சேர்ந்த சுந்தரராஜன் (45) என்பவர் நண்பரானார். இவர் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த முத்தான் என்பவரிடம் ரைஸ் புல்லிங் என்று அழைக்கப்படும் அட்சய பாத்திரம் உள்ளது.இதில் இடியிரங்கியுள்ளதால் மிகவும் அதிர்ஷ்டமானது என்று கூறி இரண்டு பாத்திரத்தை காட்டினார். ஒன்றின் விலை ரூ.5 லட்சம் என்று கூறி மொத்தம் ரூ.10 லட்சம் ஆகிறது என்றனர். இது உண்மையான அட்சய பாத்திரம் இல்லை என்று எனக்கு சந்தேகம் வந்தது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது குறித்து காவல்துறையினர் முத்தான், சுந்தரராஜனை கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு சாதாரண பாத்திரத்தை கைப்பற்றினர். மேலும் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுந்தரராஜன் கூறுகையில், சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் இதுபோன்ற போலி பாத்திரம், போலி மாணிக்க கல் என்று பல லட்சம் ஏமாற்றிய வழக்குகள் ஏற்கனவே மூன்று பதிவு செய்துள்ளோம். இதனை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் இதுபோன்ற போலி பொருட்களை வாங்க சிலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே போலிகளை கண்டு ஏமாறவேண்டாம். மேலும் இதுபோன்ற யாராவது ஆசை வார்த்தை கூறினால் உடனே அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.