தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்திய 8 ஊராட்சி தலைவர்களை பதவி நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதி மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வாய்ப்பற்ற கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி சில ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசு நலத் திட்டங்களை சீர் குலைத்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமிக்கு புகார்கள் வந்தன.
அதன் பேரில் புகார்கள் வந்த ஊராட்சி மன்றங்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம், ஒலக்கூர் ஒன்றியம் கீழ்பூதேரி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி, சின்னசேலம் ஒன்றியம் கருந்தாலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தேவகி, தச்சம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் தேன்மொழி ரவிச்சந்திரன், முகையூர் ஊராட்சி ஒன்றியம் பரனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன்,
காணை ஒன்றியம் கஞ்சனூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, செஞ்சி ஒன்றியம் பாலப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மணிபாலன், வானூர் ஒன்றியம் ஐவேலி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி ஆகிய 8 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒலக்கூர் ஒன்றியம் கீழ்பூதேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேந்திரன், செஞ்சி ஒன்றியம் பாலப்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் தயாநிதி உள்பட 10 பேரை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.