வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும், தூக்கிலிடும் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் பெல்காம் துணை ஜெயிலர் கல்லூரா மைசூர் தடா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடகாவில் பாலாறு பகுதியில் கடந்த 1993ஆம் ஆண்டு வீரப்பன் கோஷ்டியினர் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் கூட்டு அதிரடிப்படையைச் சேர்ந்த 22 போலீசார் பலியானார்கள்.
இது தொடர்பாக வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்து வந்தது.
ஒரே நாளில் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். டாக்டர்களும் 4 பேர் உடல்நிலை சீராக இருப்பதாக கூறி இருந்தனர்.
இதற்கிடையே வழக்கறிஞர் சமீக் நரேன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் மீதான தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்ததோடு வழக்கு விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பெல்காம் துணை ஜெயிலர் கல்லூரா மைசூர் தடா நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். அதில், 4 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும், தூக்கிலிடும் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.