சென்னை: தமிழகத்தில் அனைத்து வாகனங்களும், வாகனப் புகை பரிசோதனை சான்றினை வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் ராஜாராம், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மோட்டார் வாகன சட்டப்படி, அனைத்து மோட்டார் வாகனங்களும் புகை கட்டுப்பாடு பரிசோதனையை அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும். அந்த சான்றினை எப்போதும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.
மோட்டார் வாகன வரி, தகுதிச்சான்று, உரிமம் புதுப்பிப்பு, உரிமையாளர் மாற்றம் போன்ற எந்த பணிக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றாலும், அப்போது புகை பரிசோதனை சான்றினை கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
பேருந்து, வேன் போன்ற போக்குவரத்து வாகனங்களைப் பொறுத்தவரை, தகுதிச்சான்று இல்லாத வாகனங்கள், பதிவு செய்யப்பட்ட வாகனங்களாகவே கருதப்படாது. போக்குவரத்து அல்லாத வாகனத்துக்கும் தகுதிச்சான்று இருந்தால் மட்டுமே பதிவுச்சான்று செல்லத்தக்கதாகும்.
இதுபோல், இன்சூரன்ஸ் சான்று இல்லாமல், பொது இடத்தில் வாகனத்தினை ஓட்டக்கூடாது. எனவே, அனைத்து வாகனங்களும் இன்சூரன்ஸ் ஆவணத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இதுபோல் புகை கட்டுப்பாட்டு சான்று இல்லாத வாகனங்கள், தகுதியற்ற வாகனங்களாகவே கருதப்படும். அனைத்து வாகனங்களும் எல்லா நேரங்களிலும், வாகன புகை பரிசோதனை சான்றினை வைத்திருக்க வேண்டும்.
இன்சூரன்ஸ் சான்று வாங்க வருவோரிடம், வாகன புகை பரிசோதனை சான்றினை கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆட்டோக்கள் அதிக ஓசையுடன் இயக்கப்படுவதாகவும், ஆட்டோக்களில் இருந்து புகையும் அளவுக்கு அதிகமாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, ஆட்டோக்கள் மட்டுமின்றி அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும். அதிகாரிகளின் செயல்பாடும் கண்காணிக்கப்படும் என்று ராஜாராம் குறிப்பிட்டுள்ளார்.