வறட்சி நிவாரண பணத்தில் முறைகேடு; விவசாயிகள் உண்ணாவிரதம்
, திங்கள், 10 ஜூன் 2013 (20:17 IST)
வறட்சி நிவாரணத்தில் பணம் வழங்குவதில் முறைகேட்டை தவிர்க்க, காசோலையாக கொடுக்கப்படுகிறது. ஆனால் அதிலும் முறைகேடு நடப்பதைக் கண்டித்து, விவசாயிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஏ.புனவாசல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணப்பணம் வழங்குவதி்ல் கமிசன், வங்கி பணியாளர்கள் கேட்பதைத் தவிர்ப்பதற்கு, பணத்தை செக் ஆகத் தரும்படி மாவட்ட ஆட்சியர் க.நந்த குமார் உத்தரவிட்டார். ஆனாலும் ஏ.புனவாசல் வங்கியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண பணத்தை செக் ஆக அரசு கொடுத்து வந்தாலும் கூட முறைகேடு நடப்பதாக கடும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. செக் வாங்கிச் செல்பவர்களிடம், வீட்டிற்குச் சென்றோ அல்லது வேறு வகையிலோ 10 சதவீத கமிசன் தொகையை வங்கி தலைவர் மற்றும் பணியாளர்கள் குறிப்பிட்ட தரகர்களை அனுப்பி வாங்கப்படுகிறதாம்.இது தவிர வங்கியில் யார், யாருக்கு? வறட்சி நிவாரண பணம் வழங்கப்டுகிறது என்ற பெயர் பட்டியலை ஒட்டுவதற்கு, வங்கி நிர்வாகத்தினர் மறுக்கிறார்களாம். எனவே பயனாளிகள் பெயர் பட்டியலை வெளியிட்டும், செக் பெறுபவர்களிடம் மறைமுகமாக 10 சதவீத கமிசன் பெறுவதைத் தடுக்கவும் கோரிக்கை வலியுறுத்தி ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதையொட்டி நாளை(செவ்வாய்க்கிழமை) காலையில் ஏ.புனவாசல் வட்டார விவசாய பயனாளிகள் பலரும் கடலாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துகின்றனர். இது குறித்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.