அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை சார்பில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் வரும் 29ஆம் தேதி நடைபெறுகின்றன என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் வகையில் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் முதல்கட்டமாகவும், அடுத்த மாதம் 5, 6 தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முதல்நிலை போட்டிகள் நடைபெறும். பேச்சுப்போட்டியில், அறிஞர் அண்ணா வழியில் கலைஞர், மொழிப்போர் களத்தில் அய்யாவும், அண்ணாவும், கலைஞரும் என்ற இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 7 நிமிடத்திற்கு மிகாமல் பேச வேண்டும்.கட்டுரைப்போட்டியில், திராவிடத்தின் நிலை உயர்த்திய தலைவர்கள், ஏன் வேண்டும்? இடஒதுக்கீடு ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 100 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். பேனா மட்டும் எடுத்து வர வேண்டும். தாள்கள் போட்டி அறையில் தரப்படும். பகல் 2 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெறும்.கவிதை ஒப்புவித்தல் போட்டியில், இதயத்தைத் தந்திடு அண்ணா! எனும் தலைப்பில் ''விண் முட்டும் மலையோரம்'' எனத்தொடங்கி, ''உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா'' என்ற அண்ணா மறைவு குறித்து 9.2.1969 அன்று கருணாநிதி அளித்த கண்ணீர் கவிதாஞ்சலி.''
புறநானூற்றுத் தாய்-1'' எனும் தலைப்பில் கருணாநிதி எழுதிய ''குடிசைதான்! ஒருபுறத்தில்'' எனத் தொடங்கி ''வாளிங்கே! அவன் நாக்கெங்கே?'' என முடியும் கவிதை ஆகிய இரண்டு கவிதைகளில் ஏதேனும் ஒரு கவிதையை ஒப்புவித்தல் வேண்டும்.மாவட்ட அளவில் நடைபெறும் முதல்நிலை போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரத்து 500, ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் வீதம் 10 பேருக்கு வழங்கப்படும்.அந்தந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி,பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள் துணையோடு மாவட்ட கழக செயலாளரின் ஒத்துழைப்போடு இப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அந்த பகுதியில் இருந்து வெளிவரும் நாளிதழ்களில் இதுகுறித்து செய்தி வெளியிடவும், போட்டிகளின் தலைப்புகள், ஒப்பிக்க வேண்டிய பாடல்கள், இடம், நேரம் குறித்த விவர அறிக்கையை வேண்டுவோர் பெற்றுக்கொள்ளவும் ஆவன செய்ய வேண்டும். மாவட்ட அளவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இதுபற்றிய விவரங்களை நேரில் வழங்க வேண்டும்.மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் அனைவருக்கும் போட்டிக்குரிய விவரமும், ஒப்பிக்க வேண்டிய பாடல்களும் முழுமையாக அச்சடித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதிகப்படிகள் தேவையெனில் அதனை ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்துக்கொள்ளலாம். மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்றவர்கள் மாநில அளவிலான இறுதிப்போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவராவர்.இந்தப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கல்வி நிலையத்தின் சான்றுகளோடு அந்தந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களோடு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்.பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி ஆகிய போட்டிகள் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே ஒருவர் பங்குபெற வேண்டும். கடந்த ஆண்டு மாவட்ட, மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்றவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது.மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் தேர்வு செய்யப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகள் நடத்தப்பட்டு மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம், ஆறுதல் பரிசு 5 ஆயிரம் ரூபாய் வீதம் 10 பேருக்கு வழங்கப்படும். மாநில அளவிலான இறுதிக்கட்ட போட்டிகளுக்கான தேதி மற்றும் பரிசுகள் வழங்கும் தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.