மதுரையில் கூஜா வெடி குண்டுகளை பதுக்கிய வழக்கில் காவலர் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு வழக்கறிஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இது குறித்து, தென்மண்டல ஐ.ஜி.சஞ்சீவ்குமார், நெல்லை டி.ஐ.ஜி. கண்ணப்பன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லை சுத்தமல்லியில் ரவுடி மதன் உட்பட 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான 13 பேர், நிபந்தனை பிணையில் வெளிவந்து கடந்த மே முதல் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இவர்களை பழிக்கு பழியாக தீர்த்து கட்ட, மதனின் கூட்டாளிகளான பாளையங்கோட்டையை சேர்ந்த ஹரிஹர ராமசுப்பிரமணியன் (27), ஏட்டு மகன் பேச்சிமுத்து (26) உள்ளிட்டோர் முடிவு செய்தனர்.
நெல்லை, மதுரையை சேர்ந்த 2 வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி, மதன் கொலையாளிகளை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல திட்டமிட்டனர். இதற்காக பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த குட்டி என்ற சண்முகசுந்தரத்திடம் 14 கூஜா வெடி குண்டுகள் தயாரித்து வாங்கினர். ஒரு வெடிகுண்டை வெடிக்க செய்து பரிசோதித்தனர். மீதமுள்ள 13 கூஜா குண்டுகளை ஹரிஹர ராமசுப்பிரமணியனின் வீட்டில் பதுக்கி வைத்தனர்.
தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்த சிங்காரம், ராஜ்குமார் உட்பட 7 பேரை கூஜா வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய திட்டமிட்டனர். இது பற்றி ரகசிய தகவல் கிடைக்கவே, மதுரை காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இதனால், கொலை திட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, அந்த கும்பல், 13 கூஜா குண்டுகளையும் அங்குள்ள பாலத்தின் அடியில் மறைத்து வைத்து விட்டு நெல்லை திரும்பினர். இந்நிலையில், காவல்துறையினர் கூஜா வெடிகுண்டுகளை கைப்பற்றி விட்டனர். தங்களது திட்டம் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த கும்பல் கடந்த 28ஆம் தேதி சுத்தமல்லியில் தொழிலாளி கசமாடனை வெட்டிக்கொலை செய்தது.
இந்நிலையில், தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஹரிஹர ராமசுப்பிரமணியன், கண்ணன் என்ற முத்துக்கிருஷ்ணன் (22), வெங்கடேஷ் (36), ஜேக்கப் ஜெயசீலன் (28), ஆயுதப்படை காவலர் வெங்கடேஷ் (35), லெட்சுமணன் (34), முருகன் (33) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 அரிவாள்கள், துப்பாக்கி தோட்டாக்கள், வெடிமருந்துகள், பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை தலைமைக் காவலர் பழனி மகன் பேச்சிமுத்து (26), புலி என்ற முத்துசாமி (27), மூக்காண்டி, வானமாமலை (32), குட்டி என்ற சண்முகசுந்தரம் (26), திருமால், மாயாண்டி (26) ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.