Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளஸ் 2 தனித்தேர்வர்களு‌க்கு இன்று முதல் விண்ணப்ப‌‌ம்

Advertiesment
பிளஸ் 2
சென்னை , புதன், 24 நவம்பர் 2010 (10:18 IST)
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ்2 தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10ஆம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடைவெளியும் 1.3.2011 அன்று 16 1/2 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடி தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். இவர்கள் எச்பி. விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

அரசு தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட பிளஸ்2 தேர்வு தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதற்கு எச் விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

2011 பிளஸ்2 தேர்வு, 2005-06 கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வந்த பாடத்திட்டத்தின்படிதான் நடத்தப்படும். தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் டிசம்பர் 6ஆ‌ம் தேதி வரை வழங்கப்படும்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், புதுச்சேரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 6ஆ‌ம் தேதிக்குள் நேரடியாகவோ, அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சேருமாறு அனுப்ப வேண்டும்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் நெல்லையில் உள்ள அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்திலும் (சுவாமி நெல்லையப்பர் சாலை, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், நெல்லை-2), ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரையில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்திலும் 9, ஹக்கீம் அஜ்மல்கான் சாலை, சின்னசொக்கிகுளம், மதுரை-2) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோவையில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்திலும் (தீயணைப்பு சாலை, கவுண்டம்பாளையம், கோவை-30),

புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர். தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்தோர் திருச்சியில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்திலும் (1-ஏ, அரபி கல்லூரி சாலை, காஜா நகர், திருச்சி-20) விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.

காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடலூரில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்திலும் (9/8, ஆற்றங்கரை வீதி, புதுப்பாளையம், கடலூர்-1), திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தோர் வேலூரில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்தையும் (87/2, ஆற்காடு சாலை, சத்துவாச்சேரி, வேலூர்-9),

சென்னை, காஞ்‌சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் சென்னை கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தனித்தேர்வர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அரசு தேர்வுத்துறை இயக்கக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பக்கூடாது எ‌ன்று வசுந்தராதேவி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil