சின்னத்திரை நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ள இயக்குநர் சி.ஜே.பாஸ்கருக்கு தொலைக்காட்சி தொடர் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை, சித்தி, மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்திரி போன்ற தொடர்களை இயக்கியுள்ளவர் சி.ஜே.பாஸ்கர். இந்த தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கு இயக்குநர் பாஸ்கர் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன.
இது பற்றி ஆலோசிக்க சின்னத்திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சின்னத்திரை நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இயக்குநர் பாஸ்கர் தொடர்களில் இனி யாரும் நடிக்கக்கூடாது என்றும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவி நடிகை குஷ்பு கூறுகையில், இயக்குநர் சி.ஜே.பாஸ்கரால் நடிகைகளும், தயாரிப்பாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமையில் ஈடுபட்ட பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பாஸ்கர் மேல் நிறைய நடிகைகள் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்கள். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நடிகைகளை சீண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று குஷ்பு கூறினார்.
சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் விடுதலை கூறுகையில், ''இயக்குநர் சி.ஜே.பாஸ்கரால் நிறைய நடிகைகள் செக்ஸ் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது'' என்றார்.