Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள் : கருணாநிதி அறிவிப்பு

Advertiesment
தமிழகம்
சென்னை , ஞாயிறு, 22 நவம்பர் 2009 (10:37 IST)
தமிழகத்தில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வேலைநேரம் குறைப்பு, மருத்துவப்படி உள்ளிட்ட 15 புதிய சலுகைகளை தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மைய பணியாளர்கள் சங்கங்களின் சார்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி பாராட்டு விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது.இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் கருணாநிதி மேற்கூறிய அறிவிப்பினை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது :

இனி இந்த மாநாட்டில் சில புதிய அறிவிப்புகளை - பதினைந்து அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறேன்.


1. சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றில் பணிபுரிந்து 15.9.2008 முதல், ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவரும் மாதந்திர சிறப்பு ஓய்வூதிய திட்டம், 15.9.2008-க்கு முன்னர் பணி ஓய்வு பெற்ற அனைத்து சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் ஏறத்தாழ 16 ஆயிரம் ஓய்வு பெற்ற பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.

2. சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவது போன்று, மருத்துவப்படி மாதம் 100 ரூபாய் வழங்கப்படும். இதனால் ஏறத்தாழ 2 லட்சத்து 6 ஆயிரம் பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

பண்டிகைக்கால முன்பணம்

3. அரசு பணியாளர்களுக்கு வழங்குவதை போன்றே இனி, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கும் இரண்டாயிரம் ரூபாய் பண்டிகைக்கால முன்பணமாக வழங்கப்படும். இதனால் ஏறத்தாழ 2 லட்சத்து 6 ஆயிரம் பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

4. சமூக நலத்துறையில் முன்னாள் மத்திய சமையற்கூட சமையலர்களாக இருந்து, தற்போது தினக்கூலி அடிப்படையில் ஏறத்தாழ 30 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் 33 பேருக்கு, அவர்களின் தகுதிக்கேற்ப சமூகநலத் துறையில் அலுவலக உதவியாளர் - இரவுக்காவலர் போன்ற பணியிடங்களில் நியமனம் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு

5. ஏற்கனவே, சிறப்புத் தேர்வு மூலம் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட பி.எட் முடித்த சத்துணவு அமைப்பாளர் - அங்கன்வாடி பணியாளர்கள் தவிர, மீதம் உள்ள 341 பணியாளர்களுக்கும் சிறப்பு தேர்வு மூலம் ஆசிரியர் பணி வழங்க, தக்க ஆணை வெளியிடப்படும்.

6. சத்துணவு திட்டம் - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றில் பணிபுரிந்து ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் நிலை-2 மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, சத்துணவு திட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தில் 50 விழுக்காடு காலம், ஓய்வூதியத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

7. தகுதி பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சமூக நலத்துறையில் பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடத்தில் பதவி உயர்வும்; தகுதி பெற்ற பெண் சத்துணவு அமைப்பாளர்களுக்கு மேற்பார்வையாளர் நிலை 2 பணியிடத்தில் பதவி உயர்வும் வழங்கப்படும்.

சம்பளத்துடன் கூடிய விடுப்பு

8. சத்துணவு அமைப்பாளர் - அங்கன்வாடி பணியாளர்கள் அருகிலுள்ள, பொறுப்பாளர் இல்லாத மையத்தில் கூடுதல் பொறுப்பேற்றுப் பணிபுரியும்போது ஒரு நாளைக்கு 2 ரூபாய் வீதம் கூடுதல் பணப்படியாக வழங்கப்பட்ட தொகை தற்போது 10 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

9. சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்களில்; அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு 10 நாட்களுக்கு மிகாமல் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும்.

10. அங்கன்வாடி உதவியாளர் நிலை இரண்டு ஆகப் பணியமர்த்தப்பட்டவர்களை; காலிப்பணியிடங்களில் நிலை ஒன்று; ஆக நியமிக்கும்போது அவர்களுக்கு நிலை இரண்டுக்கான ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதை மாற்றி; நிலை ஒன்று பதவிக்கான ஊதியம் வழங்கப்படும். இதனால் 3,784 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.

வேலைநேரம் குறைப்பு

11. அங்கன்வாடி பணியாளர்களின் பணி நேரம் தற்போது காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை என உள்ளது. இதனை, அரை மணிநேரம் குறைத்து, பணிநேரம் காலை 8.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை என மாற்றி அமைக்கப்படும்.

12. அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பல்வேறு அலுவலர்களால் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளச் செல்வதற்காக வழங்கப்படும் பயணச்செலவுத் தொகை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

2 சேலை-மாதம் 2 நாள் விடுப்பு

13. சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது மாதம் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இனிமேல் அவர்கள் ஒரு மாதம் எடுக்காத விடுப்புடன் சேர்த்து, அடுத்த மாதம் ஒரே நேரத்தில் இரண்டு நாட்கள் வரை விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு விடுப்பு எடுப்பவர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து சத்துணவு வழங்கும் பணிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

14. குழந்தைகள் மையங்களில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு இரண்டு சேலைகள் சீருடையாக வழங்கப்படும். இதனால் 97 ஆயிரத்து 698 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

15. சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎப்) தொடங்க வழி வகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil