திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண் ஒருவரை ஏமாற்றி கற்பழித்த திருமணமானவர் மீது புகார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சோகக் கதை.மார்த்தாண்டம் அருகே உள்ள இடைகோட்டைச் சேர்ந்தவர் அனிஷா (வயது 21). இவர் அங்குள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அருமனையைச் சேர்ந்த ஹரி (26) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஹரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அதனை மறைத்து அனிஷாவை அவர் காதலிப்பது போல் நடித்தார். அனிஷாவும் அவரை தீவிரமாக காதலித்தார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அனிஷாவுடன் உல்லாசமாகவும் இருந்தார்.அதேசமயம் அனிஷாவை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அனிஷா, ஹரி பற்றி விசாரித்தபோது அவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்றவர் என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனிஷா, நேற்று காலை அருமனையில் உள்ள ஹரியின் வீட்டுக்கு சென்றார். என்னை ஏமாற்றி கற்பழித்து விட்டதால் இனிமேல் ஹரி தான் என்னுடைய கணவர் என்று கூறி வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
மேலும் ஹரி தன்னை ஏமாற்றி கற்பழித்தது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் அனிஷா புகாரை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் ஹரி வீட்டு முன்பிருந்து அவரை அப்புறப்படுத்தினர்.
இதனால் அனிஷா, தனது தந்தையுடன் நாகர்கோவிலுக்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
புகாரில் அனிஷா கூறியிருப்பதாவது, ஹரி திருமணம் ஆகாதவர் என்று கூறி என்னை ஏமாற்றி காதலித்தார். நானும் அவரை காதலித்தேன். அதன்பிறகு எனக்கு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை கிடைத்தது. நான் அங்கு சென்று வேலை பார்த்தேன். ஒருநாள் ஹரி, அங்கு வந்தார். அவருடன் ஒரு வாலிபரும், ஒரு பெண்ணும் வந்தனர். அவர்கள் 2 பேரையும் தன்னுடைய உறவினர்கள் என அவர் கூறினார்.
நீ இங்கிருந்து ஊருக்கு வா, அங்கு வைத்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். அதனால் தான் என்னுடைய உறவினர்களையும் இங்கு அழைத்து வந்துள்ளேன் என்றார். அதை நம்பி நானும் அவருடன் புறப்பட்டேன். அருமனையில் உள்ள ஒரு எஸ்டேட் பங்களாவில் என்னை தங்க வைத்தார். அங்கு என்னை அவர் கற்பழித்தார். பின்னர் அவர் என்னை எனது வீட்டருகே கொண்டு போய் விட்டு விட்டு இப்போது நீ வீட்டுக்கு போ, நான் மறுபடியும் உன்னை அழைத்து திருமணம் செய்கிறேன் என கூறி விட்டு சென்றார்.
அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரியவந்தது. இருந்தாலும் பரவாயில்லை என்னை ஏமாற்றியதால் மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். ஆனால் அவர் ‘டிமிக்கி’ கொடுத்து வருகிறார். எனவே திருமணம் ஆசை காட்டி என்னை கற்பழித்த ஹரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு, அனிஷாவின் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மகளிர் போலீசார், ஹரியை பிடித்து விசாரிக்க அவரது வீட்டுக்கு சென்றனர். அதற்குள் அவர் கேரளாவுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.