தற்போது ஹிஸ்டெர்டெக்டோமி என்ற வார்த்தை நாற்பது வயதுடைய பெண்களிடையே மிகவும் சாதாரணமாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு அர்த்தம் கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் என்பதாகும். கருப்பையை அகற்றுவதில் கருப்பை தசைநார்க் கட்டிகள் முக்கியக் காரணமாக விளங்குகிறது.
கருப்பை தசைநார்க் கட்டிகள் என்பது தீங்கற்ற திசுமிகைப் பெருக்கம் எனலாம். இது இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களிடையே 20 சதவீதம் வரை காணப்படுகிறது. கருப்பை மென்தசை செல்கள் மற்றும் இடைப்பட்ட நார்த்திசு இணைப்பு செல்களில் ஏற்படக்கூடிய வட்டவடிவக் கட்டிகளே கருப்பை தசைநார்க் கட்டிகள் என்பது.
காரணங்கள் :
1. ஈஸ்ட்ரோஜன், வளர்ச்சி இயக்குநீர் மற்றும் எச்பிஎல் கருப்பை தசைநார்க் கட்டிகளின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். இதில் ஈஸ்ட்ரோஜனின் பங்கு அதிகமாகக் காணப்படுகிறது.
ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ள நிலைகளில், கருப்பை தசைநார்க் கட்டிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அவை :
அ. பெண்கள் பூப்பு அடைவதற்கு முன்பும், மாதவிலக்கு சுழற்சி நின்ற பின்னும் தசைநார்க் கட்டிகள் வருவது அரிது. (ஈஸ்ட்ரோஜன் குறைவு காரணமாக)
ஆ. குருணை செல் கட்டிகள் மற்றும் பலபை கரு அண்டப்பை நோய்கள்
இ. கருவுற்றிருக்கும் போது, எச்பிஎல் மற்றும் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும்போது தசைநார்க் கட்டிகள் வளர்ச்சி அதிகப்படும்.
கருப்பைத் தசைகளின் சுருக்கத்தினால் மயோமெட்ரியம் என்ற கருப்பை தசை சுவரினுள்ளே அழுத்தம் ஏற்பட்டு அது திசுமிகைப் பெருக்கத்தின் வளர்ச்சியுறா செல்களின் வளர்ச்சியை தூண்டும். அழுத்தமானது பல இடங்களில் காணும்போது, பல்தசைநார்க் கட்டிகள் உருவாகும்.
உடற்கூறு
ஒரு இயல்புமாறா தசைநார்க் கட்டி என்பது வட்ட வடிவத்தில் பொய் உறையுடன் கூடிய கடினத் தன்மையுடைய கட்டியாகும். உறையில் கட்டியை மயோமெட்ரியத்துடன் இணைக்கும். இணைப்புத் திசு உள்ளது. கட்டிக்கு இரத்த ஓட்டத்தை அளிக்கக்கூடிய நாளங்கள் உறையில் இருந்து கொண்டு அதன் கிளைகளை கட்டிக்கு அனுப்பும். இத்தகைய இரத்த ஓட்ட அமைப்பினால் திசு அழிவு ஏற்பட்டால் முதலில் நடுப்பகுதியிலும், மென்திசு சுண்ணப் படிவம் ஏற்பட்டால் முதலில் வெளிப்பகுதியிலும் ஆரம்பிக்கும்.
வகைகள்
தசைநார் கட்டிகளானது கருப்பை தசை சுவர் திசுக்களின் மென்தசை செல்களில் தோன்றும். இதில் மூன்று வகைகள் உள்ளது.
1. இண்ட்ராமுரல் 75 சதவீதம்
2. சப்செரஸ் 15 சதவீதம்
3. சப்மியூகஸ் 10 சதவீதம்
1. இண்ட்ராமுரல்
கட்டியானது கருப்பை நடுத்தசை சுவரினுள்ளே இருக்கும்.
2. சப்செரஸ்
இந்தக் கட்டியானது கருப்பைக்கு வெளியே வயிற்றறை உறையை நோக்கி வளரும். இது உருண்டை வடிவத்தில் தோன்றும்.
3. சப்மியூகஸ்
இவ்வகைக் கட்டியானது கருப்பை சுருக்கத்தினால் உட்குழியை நோக்கி தள்ளப்பட்டு, கருப்பை உட்சுவர்ப் படலத்தினுள்ளே தோன்றும்.
குறிகுணங்கள்
1. பெரிய தசைநார்க் கட்டிகளில் வயிறு வீக்கத்தைத் தவிர மற்ற குறிகுணங்கள் இருக்காது.
2. தசைநார்க் கட்டிகளின் அளவு, எண்ணிக்கை, இருக்கும் இடத்தைப் பொருத்து கீழ்க்கண்ட குறிகுணங்களில் ஒன்று அல்லது பல இருக்கலாம்.
1. மாதவிலக்குக் கோளாறுகள் :
அதிக இரத்தப்போக்கு, பலமுறை ஏற்படும் மாதவிலக்கு, மாதவிலக்கு அதிகரிப்பு, மாதவிலக்கு சுழற்சி அடிக்கடி ஒழுங்கற்று ஏற்படுதல்
2. வயிற்று வலி
3. அழுத்தக் குறிகுணங்கள் :
வலியுடன் சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல், சிறுநீர் தடைப்படுதல், குடல் அடைப்பு, கால்வீக்கம்.
4. இரத்தம் கலந்த வெள்ளை ஒழுக்கு
5. கருவுறாதிருத்தல்
6. வயிற்றில் கட்டி
7. மற்ற சில குறிகுணங்கள் : இரத்தச் சோகை, படபடப்பு, மூச்சுவிட சிரமம் பெருவயிறு, இதயத்துடிப்பு மிகைப்பு, சிகப்பு அணு மிகைப்பு.
வெளிக் குறியீடுகள்
அ. நோயாளி பெரும்பாலும் 30-40 வயதுக்குட்பட்டு இருப்பர்.
ஆ. இரத்தச் சோகை இருக்கலாம்
இ. நோயாளி கூறும் இயல்பு மாறா தன்மை :
1. அதிகரித்துக் கொண்டே போகும் அதிக இரத்தப் போக்குடன் கூடிய அழுத்தக் குறிகுணங்கள்
2. வயிற்றில் கட்டி வளர்ச்சி
ஈ. வயிறானது தொப்புளுக்குக் கீழே பெருத்து வயிற்றுக் கட்டி பார்வையிலேயே தென்படும்.
உ.தொட்டுப் பார்த்து அறிதல் : கட்டியானது கூபகத்திலிருந்து இருக்கும். தொடுவதற்கு கடினமாகவும் மிருதுவான மேல் புறம் கொண்டதாகவும் இருக்கும். வீக்கமானது பக்கவாட்டில் அசையக் கூடியதாக இருக்கும். தொடுவலி காணப்பட்டால் கட்டி திருகுதல் (அ) புற்று என கணிக்கலாம்.
6. தட்டிப் பார்த்தல் : வீக்கமானது மந்தமாக இருக்கும். சில சமயம் பெருவயிறு இருக்கும்.
7. புணர்புழை பரிசோதனை : ஞநனரnஉரடயவநன அலடிஅய என்ற வகையைத் தவிர மற்ற கட்டிகளில் கருப்பையை கட்டியினின்று தனியாக உணர முடியாது மற்றும் கருப்பை கழுத்தானது வீக்கத்துடன் சேர்ந்து நகரும்.
சிறு கட்டிகளானால் கருப்பையானது பெருத்து கடினமாக ஒழுங்கான மிருதுவான மேற்புறத்துடனும் பல்தசைநார்க் கட்டிகளில் உருண்டையான ஒழுங்கற்ற மேற்புறத்துடனும் காணப்படும்.
சோதனைகள்
1. அல்ட்ரா சவுண்ட்
2. ஹிஸ்டிரோசால் ஃபிங்கோ கிராம் (சிறிய சப்மியூகஸ் தசைநார்க் கட்டியை கணிக்க)
3. ஹிஸ்டிரோஸ்கோபி
4. லேப்ராஸ்கோபி
5. எக்ஸ்ரே
6. கேட் ஸ்கேன்
சித்த மருத்துவம்
1. இரசகந்தி மெழுகு
2. சண்டரசபற்பம்
3. பிரம்மானந்த பைரவ மாத்திரை
4. வசந்த குசுமகர மாத்திரை
5. நந்தி மெழுகு
6. இடிவல்லாதி மெழுகு
7. தங்கம், வெள்ளி சேர்ந்த மருந்துகள்
8. தங்கம், கந்தகம் சேர்ந்த மருந்துகள்
போன்றவற்றை தக்க சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி பத்தியத்துடன் உட்கொண்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும். கருப்பைத் தசைநார்க் கட்டி என கண்டறிந்த உடனே தாமதிக்காமல் சித்த மருத்துவரை அணுகினால் கருப்பையை அகற்றாமல் உடல் நலனைக் காக்கலாம்