என்எல்சி ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொலை; புதிய தகவல்கள்
, செவ்வாய், 18 மார்ச் 2014 (09:41 IST)
என்.எல்.சி. சுரங்கத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு ஒப்பந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து மற்ற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் ஐ.டி.ஐ. நகரை சேர்ந்தவர் ராஜா என்ற ராஜ்குமார்(வயது35). இவர் என்.எல்.சி. 1-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை 11 மணி அளவில், ராஜா 2-வது சுரங்கத்தில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றார்.அப்போது 2-வது சுரங்கத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், ராஜ்குமாரை சுரங்கத்துக்குள் செல்ல அனுமதி மறுத்து விட்டனர். இதனால் அவருக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி ராஜ்குமார் தனது செல்போன் மூலம் நண்பரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ராஜ்குமாரை நோக்கி துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டார். இதில் ராஜ்குமாரின் தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில், அவர் மூளை சிதறி சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.