Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக பாஜக கூட்டணியில் அமளி துமளி - பாஜக தவிப்பு!

தமிழக பாஜக கூட்டணியில் அமளி துமளி - பாஜக தவிப்பு!
, திங்கள், 17 மார்ச் 2014 (19:10 IST)
தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் அவரவர் தாம் விரும்பிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து வருவதால் கூட்டணிக்குள் பெரும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக பாஜக தலைவர்கள் தவித்து வருகின்றனர்.
 
FILE

நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பாஜக தலைமையில், அதிமுக - திமுக அல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த அணியில் தேமுதிக, பாமக, ம.திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

கூட்டணியை ஒத்துக் கொண்டாலும் தொகுதிகளை விட்டுக் கொடுப்பதில் தேமுதிகவும், பாமகவும் பிடிவாதமாக இருப்பதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் இதுவரை தீர்ந்த பாடில்லை. பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கிய விஜயகாந்த் தன்னிச்சையாக 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

பிரச்சாரத்திலும் மோடியை பற்றியோ கூட்டணி பற்றியோ எதையும் பேசாமல் முதல் நாள் பிரச்சாரத்தை முடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க. தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி விஜயகாந்தை சமாதானப்படுத்தினார்கள். அப்போது ஒரு சில தொகுதி பிரச்சனையிலும் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து மறுநாள் முதல் தனது பிரச்சாரத்தில் விஜயகாந்த் மோடியை பிரதமராக்குங்கள், அவரால்தான் ஊழலற்ற ஆட்சியை தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பேசி வருகிறார். பிரச்சார பேனர்களிலும் மோடி படத்தை போட்டுள்ளார்கள்.

சேலம் தொகுதியில் பாமக ஏற்கனவே இரா.அருளை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அந்த தொகுதியை கேட்டு தேமுதிக, பாமக, பாஜக ஆகிய 3 கட்சிகளுமே மல்லுகட்டியது. இறுதியில் சேலம் தொகுதியை தேமுதிகவுக்கு கொடுக்க முடிவு செய்து இருப்பதாகவும் அந்த தொகுதியில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் வேட்பாளராக நிறுத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதனால் பாமக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேலத்தைச் சேர்ந்த கார்த்தி என்ற தொண்டர் தீக்குளிக்க முயற்சித்தார். இதேபோல் திருப்பூர் தொகுதியை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி விட்டு கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி அந்த கட்சியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தீக்குளிக்க முயன்றார். தற்போது பேச்சுவார்த்தையிலும் தீர்வு காண முடியாமலும், தொண்டர்களை சமாதானப்படுத்த முடியாமலும் தலைவர்கள் தவிக்கிறார்கள்.

பாமக ஏற்கனவே சேலம், ஆரணி, கிருஷ்ணகிரி, கடலூர், அரக்கோணம், மயலாடுதுறை, திருவண்ணாமலை, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தமிழகத்தை சேர்ந்த 9 தொகுதிகளுக்கும் புதுவை ஒரு தொகுதிக்கும் சேர்த்து 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. தொகுதி உடன்பாட்டில் பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அன்புமணிக்காக தர்மபுரி தொகுதியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பாமகவுக்கு செல்வாக்கு மிக்க சேலம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கியதை பாமக ஏற்கவில்லை. இந்நிலையில் தர்மபுரியில் நேற்று பாமக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் தனது அதிரடி முடிவை அறிவித்தார்.

தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதிக்கு ஆத்தூர் சண்முகம் என்பவரை பாமக வேட்பாளராக அறிவித்தார். இதேபோல் திருவண்ணாமலையிலும் நாங்கள் ஏற்கனவே அறிவித்த எதிரொலி மணியன்தான் வேட்பாளர். சேலத்தில் அருள்தான் வேட்பாளர். உங்களை வெற்றி பெற செய்ய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உழைப்பார்கள் என்றார்.

புதுவையில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இதில் புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சி சார்பில் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் புதுவையை விட்டுக் கொடுக்கவும் பாமக மறுத்துவிட்டது. அங்கு பாமக தனித்து போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர் அனந்தராமன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராமதாசின் அதிரடி முடிவால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாமக ஏற்கனவே அறிவித்த தொகுதியில் இடம் பெறாததும், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதுமான கள்ளக்குறிச்சி தொகுதிக்கும் பாமக திடீரென்று வேட்பாளரை அறிவித்திருப்பது கூட்டணிக்கு வேட்டு வைக்குமா? இல்லை உதவுமா? என்பது இன்று தொடரும் பேச்சுவார்த்தையில் தெரியவரும். இதற்கிடையே கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடவும் பாமக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தர்மபுரியில் தங்கி இருக்கும் ராமதாஸ் இன்று காலையில் சில முக்கிய நிர்வாகிகளை அழைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட தயாராகும் படியும், தனித்து போட்டிகுறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழக பாஜக கூட்டணியில் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil