பெண் என்ஜினீயர் கொலை: கொடூரமாக கற்பழித்து கொன்றவர்களின் வாக்குமூலம்
, புதன், 26 பிப்ரவரி 2014 (10:33 IST)
சென்னை கேளம்பாக்கம் சிறுசேரியில் பெண் என்ஜினீயர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த கொடூர கொலையாளிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ஓய்வுப்பெற்ற ஓவிய ஆசிரியர். அவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 23). இவர், கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். கடந்த 13-ந்தேதி அன்று இரவு காணாமல் போன இவர், கடந்த 22-ந்தேதி சனிக்கிழமை சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உமாமகேஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து, அடிவயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.இதனால் உமாமகேஸ்வரி கற்பழித்து, கழுத்தறுத்து, குத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தையே உலுக்கிய இக்கொலை சம்பவம் குறித்து டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யமூர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் தடவியியல் நிபுணர் குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.மாமல்லபுரம் டி.எஸ்.பி. மோகன் மேற்பார்வையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், சூப்பிரண்டுகள் நாகஜோதி, அன்பு, கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்காக சிறுசேரி வந்த அவர்கள் சம்பவ இடத்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தொழிற்நுட்ப பூங்காவை ஒட்டியுள்ள அந்த இடத்தினை சுற்றி நைலான் கயிறுகள் மூலம் கட்டி ஒவ்வொரு பகுதியாக அலசி ஆய்வுசெய்து தடயங்களை சேகரித்தனர்.