7 பேர் விடுதலை: சட்டசபையில் உறுப்பினர்கள் வாழ்த்து
, புதன், 19 பிப்ரவரி 2014 (18:18 IST)
சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வதாக அறிவித்தார். இதற்கு சட்டசபையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அதன் விவரம் வருமாறு,சபாநாயகர் தனபால்:- முதலமைச்சர் 7 இளைஞர்களுக்கு வாழ்வு கொடுக்கும் வகையில் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார். இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் தமிழ் மக்களை நேசிக்கும் மகத்தான தலைவி. தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நல்ல முடிவை அறிவித்தார். தண்டனைக்குரிய குற்றம் செய்தவர்களையும் மன்னிக்கக்கூடிய இரக்கம் கொண்டவர்கள் தான் சிறந்தவர்கள் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.அத்தகைய சிறப்பான குணத்தை முதலமைச்சர் பெற்று இருக்கிறார். 7 இளைஞர்களுக்கு புனர்வாழ்வு கிடைத்து இருக்கிறது.கொல்கத்தாவில் அன்னை தெரசா நோயுற்றவர்களை தொட்டு குணமாக்கியதால் புனிதர் ஆனார். அதுபோல் தூக்கு கயிறு வரை சென்ற 3 இளைஞர்களின் துயரம் என்ற மன நோய்க்கு சிகிச்சையாக விடுதலை என்ற சுவாசத்தை அளித்த அம்மாவும் புனிதர் ஆவார். அவர்களுக்கு நன்றி.மோகன்ராஜ் (தே.மு.தி.க.):- ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்கள் 23 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருதி உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து இருப்பதை எங்கள் கட்சி தலைவர் வரவேற்றார். உலகம் போற்றும் தீர்ப்பு என்று பாராட்டினார். அவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு தற்போது விடுதலை செய்ய முடிவு எடுத்து இருக்கிறது.முதலமைச்சர் ஜெயலலிதா:- உறுப்பினர் தவறான தகவலை தெரிவிக்கிறார். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறவில்லை. விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என்று தான் கூறியிருக்கிறது. அதனால் தமிழக அமைச்சரவை கூடித்தான் விடுதலை செய்ய முடிவு எடுத்து இருக்கிறது.
மோகன் ராஜ்:- தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்ய முடிவு செய்து இருப்பதை தே.மு.தி.க. சார்பில் பாராட்டுகிறோம்.
பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):- 7 பேரின் தண்டனையை குறைத்து விடுதலை செய்வதாக முதலமைச்சர் அறிவித்து இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் வரவேற்கிறோம். இது பாராட்டுக்குரியது. ஜனாதிபதிக்கு அனுப்பிய மனு 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டதால் உச்ச நீதிமன்றம் தண்டனையை குறைத்திருக்கிறது. இதை வரவேற்கிறோம் என்றாலும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனையானது.
ஆறுமுகம் (இந்திய கம்யூ):- முதலமைச்சர் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது. உலகம் முழுவதும், உள்ள தமிழர்கள் அனைவரும் வரவேற்கும் முடிவு. முதலமைச்சர் அறிவித்த இந்த அறிவிப்பை அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். உலக வரலாற்றில் இந்த முடிவு மிகப்பெரிய மைல்கல்.
சரத்குமார் (ச.ம.க):- உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரின் ஒரே தலைவி புரட்சித்தலைவி தான். 7 பேரை விடுதலை செய்து இருப்பது மிகப் பெரிய பாராட்டுக்கு உரியது. வரலாற்றில் இது இடம் பெறும். மத்திய அரசு பதில் தராவிட்டாலும் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார். இது மிகவும் பாராட்டுக்கு உரியது. அவரை எங்கள் கட்சி சார்பில் பாராட்டுகிறோம்.
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):- 7 பேரின் விடுதலையை பாராட்டுகிறோம். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் மரண தண்டனைக்கு எதிராக கருத்து கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா:- தி.மு.க. ஆட்சி காலத்தில் இவர்களின் தண்டனையை குறைக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாக குறைத்து விட்டு மற்ற 3 பேருக்கும் ஆயுள் தண்டனையாக குறைக்க கருணாநிதி சிபாரிசு செய்ய வில்லை.
நாங்கள் இப்போது 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். 3 நாட்களுக்கு பதில் வராவிட்டாலும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரப்படி அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
செ.கு.தமிழரசன் (குடியரசுக் கட்சி):- இது அற்புதமான அறிவிப்பு. கனவிலும் நினைத்து பார்க்க முடியாது அற்புதம் நடந்துள்ளது. இந்த முடிவை மனதார வரவேற்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் அவரை வாழ்த்தும். தமிழ் பேசும் மக்கள் வாழும் வரை அவரை பாராட்டும். இந்த பாராட்டு நிலைத்து நிற்கும்.
தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை):- 7 பேரை விடுதலை செய்யும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவு பாராட்டுக்கு உரியது. தமிழ் உலகம் இருக்கும் வரை அவரை பாராட்டும் என்று பேசினார்கள்.