வேறொரு பெண்ணுடன் இருந்த கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்து மாமனார், மாமியாரை அரிவாளால் வெட்டியதாக தே.மு.தி.க. மாவட்ட துணைச் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ரெயில்வே நிலைய ரோட்டை சேர்ந்தவர் சற்குரு என்ற செந்தில்குமார் (வயது 42). இவர் தே.மு.தி.க. மாவட்ட துணைச் செயலாளர் ஆவார். கொரட்டூரில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கோகிலா(34). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். செந்தில்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அவரது மனைவி கோகிலா, கணவரை கண்டித்தார். ஆனாலும் அவர், அந்த பெண்ணுடனான கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த கோகிலா, மதுரையில் உள்ள தனது தந்தை சுகுமாறன்(57), தாயார் ஜானகி(50) ஆகியோரிடம் தனது கணவரின் தவறான நடத்தை பற்றி கூறினார். இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை கொரட்டூர் வந்த அவர்கள், மருமகனுக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றனர்.
ஆனால் அதன் பிறகும் செந்தில்குமார் திருந்தவில்லை. மீண்டும் அவரின் கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவன் மீது கோபத்தில் இருந்த கோகிலா, மறுபடியும் தனது பெற்றோரிடம் கூறி அவர்களை கொரட்டூருக்கு வரவழைத்தார்.
கொரட்டூர் வந்த அவர்கள், நேற்று காலையில் கள்ளத்தொடர்பு விவகாரம் பற்றி மருமகன் செந்தில்குமாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், தனது மாமனார்-மாமியாரை வீட்டை விட்டு வெளியே போகும்படி கூறினார். அவர்களும் மருமகனை திட்டியவாறு வெளியேறி சென்றனர்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், வீட்டில் இருந்த அரிவாளால் மாமனார் சுகுமாறனை வெட்டினார். இதில் அவருக்கு தலை, இடது கை, தொடை ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. அப்போது தடுக்க முயன்ற மாமியார் ஜானகிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதை பார்த்ததும் அலறியபடி அங்கு ஓடிவந்த கோகிலா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வெட்டுக்காயம் அடைந்த தனது பெற்றோரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாமனார்-மாமியாரை அரிவாளால் வெட்டியதாக செந்தில்குமாரை கைது செய்தனர். அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.