தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் மரணம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் மற்றும் உறுப்பினர்கள் இளவரசனின் தாய், தந்தையிடம் இன்று முதல் கட்டமாக விசாரிக்கின்றனர்.
தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் - மனைவி திவ்யா பிரிந்த நிலையில், ரயிலில் தண்டவாளம் அருகில் மர்மமான முறையில் இளவரசன் இறந்து கிடந்தார். இதனால் தர்மபுரியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் காலவரையின்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் இளவரசன் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இளவரசன் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ சிடி அவரது தந்தை இளங்கோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரணத்தில் சந்தேகம் இருந்தால் மறு பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்துவது அல்லது முறைப்படி நீதிமன்றத்தில் தெரிவித்து இளவரசன் உடலை பெற்று கொள்வது என குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இளவரசன் சாவு குறித்த வழக்கு அதியமான்கோட்டை போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. அரூர் டிஎஸ்பி சம்பத்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை தொடங்குகின்றனர். இந்நிலையில் 4வது நாளாக இன்றும் தர்மபுரியில் பதற்றம் நீடிக்கிறது.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இளவரசன் மரணத்துக்கு பிறகு திவ்யா நேற்று சொந்த ஊரான செல்லன்கொட்டாய்க்கு வந்தார். அவரது வீட்டுக்கு 2 இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ. உள்பட 30 போலீசார் 2 ஷிப்ட் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுபடி தர்மபுரி ஆர்டிஓ மேனகா நேற்று திவ்யா வீட்டுக்கு சென்றார். நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவர்கள் மூலம் கவுன்சலிங் வழங்க உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இளவரசன் சாவு குறித்து விசாரிக்க, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் வெங்கடேசன், உறுப்பினர் சிவண்ணா ஆகியோர் இன்று தர்மபுரி வந்துள்ளனர். இளவரசனின் தந்தை இளங்கோ, தாய் ஆகியோரிடம் இன்று விசாரிக்கின்றனர்.