கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை ஓராண்டுக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னையை அடுத்த குன்றத்தூர் கரைமா நகரில் உள்ள கால்வாயில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இத குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் அனகாபுத்தூரை சேர்ந்த சிவராமன் (29) என்பதும், இவரது மனைவி லட்சுமி என்பதும் தெரியவந்தது. சிவராமன் குடிபோதையில் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கணவரின் இறப்புக்கு பிறகு லட்சுமியின் நடவடிக்கையில் சிவராமனின் தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜாய் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மீண்டும் விசாரணையை தொடங்கினர்.
அப்போது லட்சுமியின் வீட்டிற்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று லட்சுமி மற்றும் அவருடைய வீட்டிற்கு வந்திருந்த தீன் என்கிற தீனா என்ற வாலிபரை அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வாலிபர் தீனா லட்சுமியின் கள்ளக்காதலன் என்று தெரியவந்தது.
மேலும் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், லட்சுமியின் கணவர் சிவராமனை கொலை செய்ததாக அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த கொலைக்கு தீனாவின் நண்பர் சாகுல் அமீர் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து லட்சுமி, தீனா மற்றும் சாகுல் அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்தது குறித்து லட்சுமி உள்பட 3 பேரும் போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்தனர். ''கூலி வேலை செய்து வந்த சிவராமன் குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் லட்சுமிக்கு ஆவடியை சேர்ந்த தீனாவுடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்குமிடையே அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து தனது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதை உணர்ந்த லட்சுமி, சிவராமனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று தீனாவிடம் கூறினார்.
சம்பவத்தன்று குன்றத்தூர் கரைமா நகரில் சிவராமன் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார். இதையறிந்த தீனா, தனது நண்பர் சாகுல்அமீரை அழைத்துக்கொண்டு அங்கு குடிபோதையில் விழுந்து கிடந்த சிவராமனை அருகில் உள்ள கால்வாய்க்கு தூக்கிச்சென்றார். பின்னர் கால்வாய் தண்ணீருக்குள் சிவராமனை அமுக்கியதால், அவர் மூச்சுத்திணறி பலியானார். சிவராமன் குடிபோதையில் இறந்து விட்டதாக கருத வேண்டும் என்பதால் அவரை அந்த கால்வாயிலேயே போட்டு விட்டு இருவரும் சென்று விட்டனர்'' என்று அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.