காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெயலலிதா வலியுறுத்தல்
, வெள்ளி, 21 டிசம்பர் 2012 (09:50 IST)
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழிலில் விரைவில் வெளியிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காவிரி நதிநீர் நடுவர் மன்ற இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும் கோரி டெல்லியில் உங்களிடம் 14.6.11 அன்று கொடுத்த விண்ணப்பத்தையும், 17.10.11 அன்று உங்களுக்கு அனுப்பிய கடிதத்தையும் இப்போது நினைவூட்ட விரும்புகிறேன். இந்த பிரச்சனை தொடர்பாக 5.12.12 அன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது கர்நாடகா உட்பட மற்ற மாநிலத்தின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு ஒரு உண்மையை கொண்டு வந்தனர். காவிரி நதிநீர் நடுவர் மன்ற இறுதி உத்தரவை அரசிதழில் மத்திய அரசு வெளியிடவில்லை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.அப்போது நீதிபதிகள், காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு எப்போது அரசிதழில் வெளியிடப்படும் என்பது பற்றி மத்திய அரசின் அறிவுரையைப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர் என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்றுதான். கடந்த 7ஆம் தேதி காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழு தனது 31வது கூட்டத்தை நடத்தியது. அதில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இந்த மாத இறுதிக்கு பிந்தாமல் மிக விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என்று அந்தக் கூட்டத்தில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசிதழில் நடுவர் மன்றத்தின் உத்தரவு வெளியிடப்பட்டுவிட்டால், காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழு, காவிரி நதிநீர் ஆணையம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து நீடிக்காது.புதிய அமைப்புகளான காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை கமிட்டி போன்றவை புதிதாக அமைக்கப்பட்டுவிடும். காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுவின் 31வது கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கூட்டத்தில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் தலைவர் மற்றும் செயலாளர், காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு டிசம்பர் இறுதிக்கு முன்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிடும். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவை அமைக்கப்படும் என்று கருத்து கூறியுள்ளார்.இந்த சூழ்நிலையில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களை காப்பாற்றும் வகையில், காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிடுவதையும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைப்பதையும் துரிதப்படுத்த வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் உங்களிடம் இருந்து விரைவான மற்றும் சாதகமான செயல்பாட்டை எதிர்பார்க்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.