தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் ஏழைகளுக்கு இவை எட்டாக்கனியாகி விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 அதிகரித்து பவுன் ரூ.23 ஆயிரத்து 616 க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் ரூ.23 ஆயிரத்து 192 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பவுன் தங்கம், நேற்று ஒரே நாளில் திடீரென்று அதிரடியாக ரூ.424 விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 616 க்கு விற்பனையானது.
தங்கத்தின் தேவை அதிகரிப்பு, திருமண சீசன், விழா காலங்கள் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை இன்னும் ஒரு சில நாட்களில் ரூ. 24 ஆயிரத்தை கடந்து விடும் என்றே தெரிகிறது.
தங்கத்திற்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல வெள்ளி விலையும் நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவிற்கு தொடர்ந்து உயர்ந்து வந்தது. தற்போது வரலாறு காணாத வகையில் வெள்ளி கிலோ ரூ.60 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் ரூ.58 ஆயிரத்து 510 க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் அதிரடியாக கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 465 விலை உயர்ந்து, ரூ.60 ஆயிரத்து 975 க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலையை போன்றே வெள்ளியின் விலையும் வரலாற்று சாதனை படைத்து வருகிறது.
தங்கத்தின் அதிரடி விலை உயர்வு குறித்து நகைகடை வியாபாரிகள் கூறுகையில், திருமண சீசன் காரணமாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது என்றனர்.