பசுபதிபாண்டியன் கொலையில் பெண் உள்பட 2 பேர் கைது (படங்கள்)
, செவ்வாய், 24 ஜனவரி 2012 (12:24 IST)
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் புறந்கர் பகுதியான நந்தவனபட்டியில் வசித்து வந்த பசுபதிபாண்டியன் கடந்த 10ஆம் தேதி தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்த போது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக கடந்த 12ஆம் தேதி ஆறுமுகச்சாமி, அருளானந்தம் ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இவர்களை கடந்த 19ஆம் தேதி காவல்துறையினர் தனது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து எதிரிகளுக்கு நந்தவனப்பட்டியில் வீடு பிடித்துக் கொடுத்து இந்த கொலைக்கு உதவியாக இருந்தவர் இப்பகுதியைச் சேர்ந்த காவலரின் சகோதரி நிர்மலா என்பது தெரிய வந்தது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது ஜான்பாண்டியன் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவரும், கரட்டழகன்பட்டி வெள்ளோடு பகுதி ஊராட்சி ஒன்றிய உறுப்பினருமான மு.முத்துப்பாண்டி இந்த கொலையில் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த முனியாண்டியின் மகனான முத்துப்பாண்டி (37) ஏற்கனவே பசுபதி பாண்டியனுடன் இருந்தவர். பின்னர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவராகவும் பின்னர் அதிலிருந்து விலகி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத்தலைவராகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் நந்தவனப்பட்டி தலித் இனத்தைச் சேர்ந்த நிர்மலாவை இதே இனத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி சுபாஷ்பண்ணையாருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பசுபதி பாண்டியன் இல்லாமல் போனால் அந்த இடத்திற்கு முத்துப்பாண்டி வரலாம் என சுபாஷ் பண்ணையார் கூறியதாக நிர்மலா காவல்துறை விசாரணையில் கூறியுள்ளாராம்.இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் 5வது எதிரியாக நிர்மலாவும், 6வது எதிரியாக முத்துப்பாண்டியும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் வழக்கு தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.