சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 400 ரூபாயும், அடுத்தடுத்த தவறுகளுக்கு 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இருசக்கர வாகனப் பதிவைப் புதுப்பிக்கத் தவறினால், முதல் முறை பிடிபடும் போது 100 ரூபாயும், அதற்கு அடுத்த ஒவ்வொரு முறையும் 300 ரூபாயும் வசூலிக்கப்படும். பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால், முதல் முறை 2 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படும்.
இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தால் 100 ரூபாயும், இரண்டாம் முறை அதே தவறுக்கு 300 ரூபாயும் விதிக்கப்படும். அபாயகரமாக வாகனம் ஓட்டினால் 1000 ரூபாயும், மீண்டும் தவறு செய்தால் 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும்.
அதிவேகமாக வாகனம் ஓட்டினால், 400 ரூபாயும், அடுத்தடுத்த தவறுகளுக்கு 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தலைக் கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டி, முதல் முறை பிடிபட்டால் 100 ரூபாயும், அடுத்தடுத்த முறைகளில் 300 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டத் தவறினால், 100 ரூபாயும் அடுத்தடுத்த முறைகளுக்கு 300 ரூபாயும் விதிக்கப்படும். இந்தப் புதிய உத்தரவு, சென்னை மாநகரில் வரும் 30ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.